உயர் நிலை வகுப்புகளுக்கு புதிய கல்வி முறை : வரும் கல்வியாண்டில் அறிமுகம்
மத்திய அரசு சார்பில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி திட்டத்தின் கீழும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படைப்பாற்றல் கல்வி திட்டத்தின் கீழும் பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, உயர்நிலை வகுப்புகளுக்கு புகுத்த திட்டமிடப்பட்டு; கடந்தாண்டு தேசிய அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் மேம்பாடு செய்யப்படவுள்ளது. இதில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் 'படைபாற்றல் பிளஸ்' என்ற புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இக்கல்வி முறையின் கீழ் கடந்தாண்டு ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் பாடம் சார்ந்த இப்பயிற்சி வழங்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டு, நடப்பாண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படவுள்ளது.
மேலும், உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த கல்வியும், ஆய்வக பயிற்சியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் ஆய்வகம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு; ஆய்வக உபகரணங்கள் வாங்க, பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடன், ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்கும், நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்குவதற்கும், இதர செலவுகளுக்காகவும் பள்ளிக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'படைப்பாற்றல் பிளஸ்' கல்வி முறையின் கீழ் ஜூலை மாதம் முதல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கழிப்பறையுடன் போலீசாருக்கு குளிரூட்டப்பட்ட நிழற்குடை : மதுரையில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன்முறையாக, மதுரை நகர் போலீசாருக்கு 3.50 லட்சம் ரூபாய் செலவில், கழிப்பறை வசதியுடன் குளிரூட்டப்பட்ட நிழற்குடை நேற்று திறக்கப்பட்டது. தீயணைப்பு கருவி, முதலுதவிக்கான மருந்துகள் இருப்பதுடன், ரயில், விமான நேரங்கள் மற்றும் மதுரை குறித்த தகவல்களும் இங்கு தெரிவிக்கப்படுகிறது. மதுரை ஆவின் சந்திப்பில், போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியன் திறந்து வைத்தார். உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். 'ஸ்பான்சர்' மூலம் அமைக்கப்பட்ட இந்த நிழற்குடையின் மதிப்பு 3.50 லட்சம் ரூபாய். மின் மற்றும் தண்ணீருக்கான மாத பராமரிப்பு செலவையும் 'ஸ்பான்சர்' ஏற்கின்றனர். பழமையான மதுரை குறித்த படங்கள் மற்றும் போலீஸ் பணி குறித்த படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை நிழற்குடை திறந்திருக்கும். இங்குள்ள போலீசாரிடம் பொதுமக்கள் புகார் கூறினால், வாக்கிடாக்கி மூலம் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவிப்பர்.
கமிஷனர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''போக்குவரத்து போலீசார் மட்டுமில்லாமல், அனைத்து பிரிவு போலீசாரும் இதை பயன்படுத்துவர். நான் உட்பட உயர் அதிகாரிகளும் அவ்வப்போது இங்கு 'விசிட்' செய்வோம். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் மையமாக இது செயல்படும்,'' என்றார்.
ஆளில்லா ஆழ்கடல் ஆய்வு இயந்திரம் : தெற்காசியாவில் முதலாவதாக அறிமுகம்
சென்னை தேசியக் கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகத்தில், சுனாமி, கடல்நீரை குடிநீராக்குவது, கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்கள், உயிரினங்கள் என பல்வேறு ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன. சென்னை தேசியக் கடல்வளத்துறை தொழில் நுட்பக் கழகத்தில், பத்திரிகையாளர்களுக்கான சந்திப்பு நடந்தது.
அப்போது, புவி அறிவியல் துறை இணை அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் பேசியதாவது: தேசியக் கடல் வளத் துறை தொழில் நுட்பக் கழகத்தின் அதிகாரிகள் கடந்த நான்கு வருடங்களாக முயற்சி செய்து, ஆழ் கடலில் ஆய்வு செய்ய, ஆளில்லா ஆராய்ச்சி இயந் திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரம், 5,289 மீட்டர் ஆழத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. கடலில், தமிழக எல்லையில் இருந்து 2,500 கி.மீ., தூரத்தில் இந்த ஆய்வு நடந்தது. கடலுக்கு அடியில் உள்ள தாதுப் பொருட் களை கண்டறிந்து, அதை மனித வள உபயோகத்திற்காக வெட்டி எடுத்து பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆழ்கடலில் உள்ள அரியவகை உயிரினங்கள், அவற்றின் உடல் கூறுகள், மீன் வளங்கள் குறித்த ஆய்வுகள் இந்த இயந்திரத்தின் உதவியால் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு ஆராய்ச்சி தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாகும். இந்த ஆராய்ச்சியின் மூலம் தாதுப் பொருட்கள் கிடைத்தால் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக் கும். இவ்வாறு மத்திய அமைச்சர் பேட்டியளித்தார்.
பேட்டியின் போது, ஆளில்லா ஆராய்ச்சி இயந்திரம் மூலம் கடலுக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட தாது கற்களை அவர் காண் பித்தார். பேட்டியின் போது புவி அறிவியல் துறை செயலர் சைலேஷ் நாயக், தேசியக் கடல்வளத்துறை தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குனர் ஆத்மானந்த் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ரிமோட் தெரு விளக்கு- முதல்முறையாக டெல்லியில் அறிமுகம்
முதல்கட்டமாக டெல்லியில் சுமார் 101 கி.மீ தொலைவுக்கு 52 சாலைகளில் 2 ஆயிரத்து 235 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
லோதி சாலை, பீஷ்ம பிதா மார்க், ஜவஹர்லால் நேரு மார்க் உள்ளிட்ட சாலைகளில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.மேஹ்ரா இன்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மொபைல் போன் சேவைக்கு பயன்படுத்தப்படும் ஜிபிஆர்எஸ் மற்றும் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பிலிப்ஸ் எலெக்ட்ரானிக்ஸ், பிபி பிராஜக்ட் லிட், ஸ்வேகா பவர் டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இத்திட்டத்தின் மூலம், தெருவிளக்குகளை குறிப்பிட்ட அலுவலகத்தில் இருந்த படியே இயக்க இயலுவதோடு, எரிசக்தி சேமிப்பும், கார்பன் மாசு கட்டுப்படுவதும் சுலபமாகும் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரட்டை போலியோ தடுப்பு மருந்து
பி1 மற்றும் பி3 ஆகிய இருவித போலியோ நோய்களையும் தடுக்கும் பிரத்தியேக பிஓபிவி போலியோ தடுப்பு மருந்து நாட்டில் முதல்முறையாக பீகாரில் இன்று குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மூலம் வெளியிடப்பட்ட இந்த 'டூஇன்ஒன்' சிறப்பு போலியோ மருந்து முதல்கட்டமாக பீகாரில் இன்று சுமார் 25 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
போலியோ நோயில் பி1, பி2, பி3 ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இதில் மிகவும் அபாயகரமான பி2 வகை போலியோ நோய் கடந்த 1999ம் ஆண்டிலேயே இந்தியாவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பி1 மற்றும் பி3 போலியோ ஒழிப்புக்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் அளிக்கப்படும் பி1 நோய் தடுப்புக்கான எம்ஓபிவி1 தடுப்பு மருந்து உபயோகப்படுத்தப்படுகிறது.
போலியோவை ஒழிக்க ஆண்டுக்கு ரூ. 1200 கோடி அரசு செலவழிக்கிறது. ஆனாலும் இந்த போலியோவை முற்றிலுமாக ஒழிக்க இயலவில்லை.
இந்நிலையில் பி1 மற்றும் பி3 ஆகிய இரண்டு வகை போலியோக்களையும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிஓபிவி தடுப்பு மருந்தை மத்திய அரசு தற்போது உபயோகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக தற்போது பீகார் மாநிலத்திலும், அடுத்தாண்டு முதல் உத்தரப்பிரதேசத்திலும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.