நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்-விஜயகாந்த், டி.ஆர்.பாலு மகன் வர முடியாது!

தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தடை உத்தரவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், திமுக எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நாளைய பட்ஜெட் தாக்கலின்போதும், விவாதத்தின்போதும் வர முடியாது.

தமிழக அரசின் 2012-13ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல்செய்யப்படுகிறது. அதன் பின்னர் அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூடி அவையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது தீர்மானிக்கப்படும்.

பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது. விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். இதைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படும். பட்ஜெட் கூட்டம் ஒரு மாதத்துக்கு மேல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று தெரிகிறது. குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ள சங்கரன்கோவில் மக்களை குஷிப்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டங்கள் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

அதேசமயம், வழக்கம் போல பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் ஆயத்தமாக உள்ளன. மின்வெட்டை முக்கியப் பிரச்சினையாக எழுப்பலாம் என்று தெரிகிறது. அதேபோல சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் எழுப்பபப்படும் என்று தெரிகிறது.

விஜயகாந்த் வர முடியாது

கடந்த சட்டசபைத் தொடரின்போது நாகைக் துருத்தி, கையை உயர்த்தி, விரல்களை நீட்டிப் பேசியதால் 10 நாட்களுக்கு விஜயகாந்த் தடை செய்யப்பட்டுள்ளார். அதேபோல அவைக் கூட்டத்தை செல்போனில் வீடியோ படம் எடுத்ததாக டி.ஆர்.பாலு மகன் ராஜாவும் தடை செய்யப்பட்டுள்ளார். எனவே இவர்கள் இருவரும் பட்ஜெட் தாக்கலின்போதும், பின்னர் நடைபெறும் விவாதத்திலும் கலந்து கொள்ள முடியாது.

0 comments: