Showing posts with label பரிசோதனை. Show all posts
Showing posts with label பரிசோதனை. Show all posts

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை!

இமாசலபிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டதையடுத்து, போலீசார் இன்று நித்யானந்தாவை பெங்களூர் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நித்யானந்தாவுக்கு முதலில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூர் மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு மற்ற புகார்கள் மீதான விசாரணை தொடங்கும்.

நித்யானந்தாவுக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும் வங்கி கணக்குகளை சீல் வைக்கவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

எனவே நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் உடனே சிறையில் அடைக்கப்படுவார் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவார்.

பாபநாசம் சுகாதார விழாவில் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

பாபநாசம் தூயசவேரியார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த சுகாதார திருவிழா மருத்துவ முகாமில் 4 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்த இந்த மருத்துவ முகாமில் கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 127 பேருக்கு ரூபாய் 22 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 இடங்களில் சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 20 ஆயிரத்து 433 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். பாபநாசத்தில் நடந்த முகாமில் 4 ஆயிரம் பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளைச் சேர்ந்த 200 டாக்டர்கள், 400 சுகாதாரப் பணியாளர்கள்
பங்கேற்று பரிசோதனை செய்தனர். மாற்று திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

கண் பரிசோதனையும் செய்யப்படுகிறது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உயர் அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்து உள்ள 2 ஆயிரத்து 740 பேரில் இதுவரை 2 ஆயிரத்து 436 பேருக்கு ரூபாய் 7 கோடியே 26 லட்சம் மதிப்பில் உயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சண்முகம் கூறினார்.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் சேக்தாவூது, ஒன்றியக்குழு தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் தாமரைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் சுலைமான் பாட்சா, துணைத் தலைவர் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பின்னர் சரபோஜிராஜபுரம் தொடக்க கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் வழுத்தூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கலெக்டர் சண்முகம் திடீர் ஆய்வு நடத்தினார்.