பாபநாசம் தூயசவேரியார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த சுகாதார திருவிழா மருத்துவ முகாமில் 4 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்த இந்த மருத்துவ முகாமில் கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 127 பேருக்கு ரூபாய் 22 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 இடங்களில் சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 20 ஆயிரத்து 433 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். பாபநாசத்தில் நடந்த முகாமில் 4 ஆயிரம் பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளைச் சேர்ந்த 200 டாக்டர்கள், 400 சுகாதாரப் பணியாளர்கள்
பங்கேற்று பரிசோதனை செய்தனர். மாற்று திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
கண் பரிசோதனையும் செய்யப்படுகிறது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உயர் அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்து உள்ள 2 ஆயிரத்து 740 பேரில் இதுவரை 2 ஆயிரத்து 436 பேருக்கு ரூபாய் 7 கோடியே 26 லட்சம் மதிப்பில் உயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சண்முகம் கூறினார்.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் சேக்தாவூது, ஒன்றியக்குழு தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் தாமரைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் சுலைமான் பாட்சா, துணைத் தலைவர் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பின்னர் சரபோஜிராஜபுரம் தொடக்க கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் வழுத்தூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கலெக்டர் சண்முகம் திடீர் ஆய்வு நடத்தினார்.
0 comments:
Post a Comment