புனே மற்றும் அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்குவதற்காக அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் சமர்ப்பித்த ஏலத் தொகை அடங்கிய டாக்குமென்டுகள் காணவில்லை என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஏலத்தில் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் தோல்வி அடைந்தன. இந்தத் தோல்விதான், தரூர், மோடி இடையிலான மோதலுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
ஐபிஎல் முறைகேடுகள் குறித்த சர்ச்சை வெடித்ததும், மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமை அலுவலகத்திலும், மோடியின் அலுவலகங்களிலும் வருமான வரித்தறையினர் சோதனை நடத்தினர். பல ஆவணங்களைக் கைப்பற்றினர்.
ஆனால் இதுவரை அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் ஏலம் கேட்டு தொகையுடன் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
குஜராத்தைச் சேர்ந்த அடானி குழுமம் அகமதாபாத் அணியை வாங்க 5 பில்லியன் டாலர் ஏலத் தொகையுடன் விண்ணப்பித்திருந்தது. இந்தக் குழுமத்தின் தலைவர் கெளதம் அடானி ஆவார்.
இதேபோல, வேணுகோபால் தூத் தலைமையிலான வீடியோகான் நிறுவனம் புனே அணியை வாங்க 4 பில்லியன் டாலர் ஏலம் கேட்டிருந்தது.
இரு நிறுவனங்களும் ஏலத்தில் தோல்வி அடைந்தன. புனே அணியை சஹாரா குழுமம் வாங்கி விட்டது. அகமதாபாத் அணியை கேட்ட ரெண்டஸ்வஸ் நிறுவனம் பின்னர் கொச்சியைத் தேர்வு செய்தது. அதன் பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில்தான் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் கொடுத்த ஏல ஆவணங்களைக் காணவில்லை என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. அது கிடைத்தால் பல முக்கியத் தகவல்கள் விசாரணைக்குக் கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
புனே, அகமதாபாத் அணிகளுக்கான ஏலத்தின் முதல் சுற்றில் பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை, அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்களுக்குச் சாதகமானதாக இருந்த்தாக சர்ச்சை எழுந்தது. நிபந்தனைகளில் ஒன்று 100 மில்லியன் டாலர் வங்கி உத்தரவாதம் என்பதாகும்.
இதையடுத்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தலையிட்டு இந்த நிபந்தனைகளை ரத்து செய்து விட்டு புதிதாக ஏலம் நடத்த உத்தரவிட்டார். அந்த 2வது கட்ட ஏலத்தின்போது அடானி, வீடியோகான் நிறுவனங்களுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இதனால் அதிக தொகைக்கு விண்ணப்பித்த ரெண்டஸ்வஸும், சஹாராவும் புனே, கொச்சி அணிகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment