குழந்தைகளை கல்வி கற்க அனுப்பாத பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை : நாகை கலெக்டர் எச்சரிக்கை

பள்ளிக்கு குழந்தைகளை கல்வி கற்க அனுப்பாத பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் (பொ) அண்ணாதுரை தெரிவித்தார்.வேதாரண்யம் அருகே தகட்டூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அனந்தராசு, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் (பொ) அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 133 மனுக்களை பெற்றுக் கொண்டார். அதில் 93 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை எடுத்து பயனாளிக்குத் தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:தற்போது கட்டாய கல்வி திட்டம் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதி முழுவதும் ஆசிரியர்களும், அரசு பணியாளர்களும் நிறைந்த பகுதியாகும். எனினும் 158 பேர் பள்ளிகளுக்கு சென்று படிக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி பெற்றோர் தங்களது பிள்ளைகளை கல்வி கற்க பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு கல்வித்துறை அதிகாரிகளும், அரசின் மற்ற அதிகாரிகளும் கண்காணித்து பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கு கட்டணமில்லை.

கல்வி கற்க குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோய்க்கு காரணமாக விளங்கும் புகையிலையை தவிர்த்து மாற்றுப் பயிர் வகைகளை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும் என்றார்.மேலும் 36 பேருக்கு திருமண உதவி, 4 பேருக்கு புதிய பட்டா வழங்குதல், 9 பேருக்கு முதியோர் உதவித்தொகை என பல நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தாசில்தார் கருணாகரன், ஒன்றிய ஆணையர்கள் மூர்த்தி, மஞ்சுளா, நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகட்டூர் ஊராட்சித் தலைவர் அமிர்தகடேஸ்வரன் வரவேற்றார். தாசில்தார் கருணாகரன் நன்றி கூறினார்.

0 comments: