எரிமலை வெடித்ததால் வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம், அந்த பகுதியில் 11.கி.மீ., சுற்றளவுக்கு வான்வெளியில் பரவியுள்ளது. இந்த சாம்பல் தூசி மண்டலத்தில் நிறைந்து காணப்படும் துகள்களால், விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்பட்டு, பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடாவிலும் விமான சேவை பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஐஸ்லாந்து வான்வெளி வழியாகச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.
எரிமலையில் நேற்றும் சீற்றம் இருந்தது. அதிலிருந்து அதிக அளவில் சாம்பல் தூசி வெளியேறி, வான்வெளியை சூழ்ந்தது. இதனால், நேற்றும் விமானங்கள் இயக்கப்படவில்லை. எரிமலை வெடிப்பு காரணமாக, உலகம் முழுவதும் 17 ஆயிரம் விமானங்கள், இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு தினமும், பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள், தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
'எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம் எப்போது முழுமையாக மறைந்து, வான் பகுதி சீராகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரங்களில் மாதக்கணக்கில் கூட, இந்த தூசி மண்டலம் காணப்படும்' என, எரிமலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால், விமானப் பயணிகளும், விமான போக்குவரத்து நிறுவன அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னையிலும் பாதிப்பு : சென்னையில் இருந்து புறப்படும் மூன்று விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னை - பிராங்பர்ட் செல்லும் லுப்தான்சா, சென்னை - லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சென்னை - பிரஸ்ஸல்ஸ் செல்லும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment