பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடக்கும் சோயப் - சானியா மிர்சா திருமண வரவேற்பு விருந்தில், தடபுடலாக பல்வேறு வகை உணவுகளை பரிமாறக்கூடாது என்ற மாகாண அரசின் உத்தரவால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் ஐதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இன்று இவர்களது திருமண வரவேற்பு, ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.
சோயப் மாலிக் வீட்டு சார்பில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் வரும் 22ம் தேதி, திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதற்காக 500 பேருக்கு விருந்தளிக்க, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோழிக்கறி குழம்பு, குலாப் ஜாமூன், ரசமலாய் ஆகியவை இந்த விருந்தில் பரிமாற திட்டமிடப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவு படி எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும், திருமண விருந்தில் ஒரு சிறப்பு வகை உணவு பதார்த்தத்திற்கு மேல் பரிமாறக்கூடாது என்ற உத்தரவு, அமலில் உள்ளது.
திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் அங்கு இந்த உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.'சோயப் - சானியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி வி.வி.ஐ.பி.,க் கள் சம்பந்தப் பட்டது என்றாலும், பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவை மீற முடியாது' என, ஓட்டல் நிர்வாகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இதனால், சோயப் - சானியா திருமண வரவேற்பில் தடல்புடல் விருந்தை எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி, சோயப்பிற்காக மாகாண அரசு ஏதாவது உத்தரவு புதிதாக போட்டால் தான், நிலைமை மாறும்.
சானியாவின் பெயரைமாற்றிய பெற்றோர்:டென்னிஸ் வீராங்கனை சானியா மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த மதன்லால் - கீதா தம்பதியர், கடந்த 2002ம் ஆண்டு பிறந்த தங்கள் குழந்தைக்கு முஸ்லிம் பெயரான சானியா என்று வைத்தனர்.
தற்போது சானியா மிர்சா, பாகிஸ்தானியரை மணந்துள்ளதால் இந்த தம்பதியர் கோபமடைந்துள்ளனர். எனவே, தங்கள் மகளுக்கு வைத்த சானியா பெயரை மாற்றி, 'சங்கீதா' என பதிவு செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment