ஏப்., 26ல் முத்துப்பேட்டை கந்தூரி விழா திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடக்க உள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு ஏப்ரல் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பெரிய தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ந்தாண்டு கந்தூரி விழா ஏப்ரல் 16 முதல் 26ம் தேதி வரை நடக்க உள்ளது.

இவ்விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் திருவாரூர் கலெக்டர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. கலெக்டர் சந்திரசேகரன் பேசியதாவது: இவ்விழாவை எவ்வித பிரச்னையும் இன்றி அமைதியாகவும், சிறப்பாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

விழாவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கழிப்பறை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அந்தந்த துறையினர் செய்து முடிக்க வேண்டும். விழாவை காண வரும் பொதுமக்கள் வசதிக்காக பக்கத்து ஊர்களில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அரசு சிறப்பு பஸ்கள், கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விழா துவங்கி முடியும் வரை தேவையான மருந்து பொருட்களுடன் நடமாடும் மருத்துவ குழுவினர் மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். தண்ணீர் வசதியுடன் கூடிய தீயணைப்பு வாகனங்களை எப்போதும் நிறுத்தி இருக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி கந்தூரி விழா துவங்கும் தினமாக ஏப்ரல் 16ம் தேதியும், சந்தனக்கூடு விழா நடக்கும் 26ம் தேதியும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். சீருடை இல்லாத ரகசிய போலீஸார் கூட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தேவையான இடங்களில் ரகசிய கேமராக்கள் அமைத்து கூட்டத்தை கண்காணிக்க வேண்டும். விழா சிறப்பாக நடக்க அனைத்து துறை அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருவாரூர் எஸ்.பி., பிரவின்குமார் அபினவ், முத்துப்பேட்டை தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர்அலி, உறுப்பினர்கள் அலிஅக்பர், நூர்முகம்மது உட்பட பலர் பங்கேற்றனர்.

0 comments: