சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா?

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு மும்பையில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


சென்னை அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.

இதேபோல் முதல் முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 அரை இறுதியும், 3-வது இடத்துக்கான போட்டியும் ஒரு சைடு ஆட்டமாக இருந்தது. இதனால் இன்றைய இறுதிப்போட்டியாவது பரபரப்புடன் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தெண்டுல்கர் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் ஜாகீர்கான் கேப்டனாக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

அந்த அணியில் போலர்ட் துருப்பு சீட்டாக உள்ளார். சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான அவர் பவுலிங்கிலும் முத்திரை பதிக்க கூடியவர். அம்பத்தி ராயுடு, திவாரி, டுமினி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

தெண்டுல்கர் இல்லாத வாய்ப்பை சென்னை அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்டிங்கில் ரெய்னா, முரளி விஜய், கேப்டன் டோனி ஆகியோரும், பந்து வீச்சில் போலிஞ்சர், அஸ்வின் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் 6 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

0 comments: