வருமானவரித்துறை திடீர் கிடுக்கப்பிடி: சிக்குகின்றன ஐ.பி.எல்., அணிகள்

கொச்சி கிரிக்கெட் அணி ஏலம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் சசி தரூர் மீது ஊழல் புகார் கூறப்பட்டதால், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தலைமையகம் மற்றும் லலித் மோடியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி, ஐ.பி.எல்.,லின் மற்ற கிரிக்கெட் அணிகள் ஏலம் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

இதனால், பல புதிய தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல்., கொச்சி அணியை, 'ரெண்டவூ ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு' என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை தனது தோழியும், எதிர்கால மனைவியுமான சுனந்தா புஷ்கருக்கு மத்திய இணை அமைச்சர் சசி தரூர் இலவசமாக வாங்கிக் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அணியின் பங்குதாரர்கள் விவரத்தை வெளியிடக் கூடாது என, ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடியை, அமைச்சர் தரூர் மிரட்டியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, ஐ.பி.எல்., அணிகள் பல நூறு கோடிக்கு ஏலம் போவது பற்றியும், அவற்றுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பது பற்றியும் அறியும் வேலையில் வருமான வரித்துறையினர் இறங்கியுள்ளனர். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள ஐ.பி. எல்., தலைமையகம் மற்றும் வோர்லியில் உள்ள லலித் மோடியின் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை சோதனையிட்டனர்.

சோதனை பற்றி நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கொச்சி அணி ஏல பிரச்னை எழும் முன்னரே, ஐ.பி.எல்., அமைப்பு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில், ஐ.பி.எல்., அணிகளின் ஏலம், அவற்றை எடுத்தவர்கள், அதன்மூலம் கிடைக்கும் வருவாய், ஐ.பி.எல்., மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இடையே வருவாயை பகிர்ந்து கொள்ளும் முறை உட்பட பல விவரங்களை தெரிவிக்கும்படி கூறப்பட்டது. அதை செய்ய ஐ.பி.எல்., அமைப்பும், லலித் மோடியும் தவறி விட்டதால், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் மூலம் கிரிக்கெட் அணிகள் தொடர்பான பல ரகசிய தகவல்கள் அம்பலமாகும்.இவ்வாறு நிதி அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

மேலும், ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் நிதி விவகாரங்கள் மற்றும் பங்கு முறைகள் குறித்து, ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன் ஏல நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை கண்டறிய மும்பையில் பல இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.இதுமட்டுமின்றி, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களிடமும் விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது அவர்கள் செய்துள்ள முதலீடு, அவை கிடைத்ததற்கான நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்கப்படும். இந்த விசாரணை இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், நேற்று தர்மஸ்தலா வந்த லலித் மோடி, நிருபர்களிடம், 'ஐ.பி.எல்., போட்டிகள் தொடரும். இங்கு கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டு மீட்டிங் ஏதும் இல்லை' என்றார். அதே சமயம் கொச்சி விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

வரித்துறையினர் கேள்விக்கு பதிலளித்தோம்: லலித் மோடி : வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பின், நிருபர்களிடம்பேசிய லலித் மோடி கூறியதாவது: ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகள் தொடர்பான ஆவண விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஏல நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அவர்கள் கேட்ட விவரங்களை அளித்தோம்.

கேள்விகள் சில நிமிடங்களில் முடிந்து விட்டாலும், அதுதொடர்பான ஆவணங்களை பரிசீலிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.ஆவணங்களை பரிசீலித்ததிலும், விசாரணை நடத்தியதிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர். எங்கள் அமைப்பு ஒரு பொது அமைப்பு. அவர்கள் மேலும் ஏதாவது கேள்விகள் கேட்டாலும், அதற்கும் நாங்கள் பதில் அளிப்போம். என்னுடைய லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், என் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியான செய்திகள் தவறு. ஐ.பி.எல்., அணிகள் தொடர்பாக நகரில் உள்ள பல அலுவலகங்களுக்கு வருமான வரித்துறையினர் விஜயம் செய்ததும், எனது அலுவலகத்திற்கும் வரும்படி அழைப்பு விடுத்தேன்.இவ்வாறு லலித் மோடி கூறினார்.மேலும், லலித் மோடிக்கு மத்திய உணவு அமைச்சர் சரத் பவார் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

0 comments: