Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

மன்னார்குடியில் இலங்கை வாலிபர் கைது!

மன்னார்குடியில் இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரித்ததில் தனது பெயர் முகமது ரிபாக்(26) எனவும், தான் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். இப்பகுதியில் இருந்த சைக்கிள் கடையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்துச் சென்றுவிட்டு, திருப்பி விடுகையில் கடைக்காரர் பணம் கேட்டதற்கு, அவரை மிரட்டி உள்ளான்.
முகமது ரிபாக்கின் நடவடிக்கையில் சந்தேகம் வரவே, அப்பகுதியினர் ரிபாக்கை போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவனிடம் இருந்த பையை சோதனையிட்ட போது, அதில் 18 பெயர்களில் 18 விதமான கிரடிட் கார்டுகளும், 5 ரேஷன் கார்டுகளும், 2 அடையாள அட்டைகளும் இருந்துள்ளன.

ரிபாக் ஏதாவது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவனா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீமான் சென்னை திரும்பினார்

மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் நினைவாக நேற்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கனடாவில் நேற்று மாவீரர் தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக டைரக்டர் சீமான் கனடா சென்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில் இளைஞர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் சட்ட விரோதமாக பேசியதாக கூறி கனடா போலீசார் சீமானை கைது செய்தனர். அவரை குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். இன்று அதிகாலை டைரக்டர் சீமான் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பிரபாகரன் படத்துடன் திரண்டனர். அவர்கள் ஈழத்துக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர்.


பிரபாகரனுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் டைரக்டர் சீமான் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் நான் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறேன். இந்த ஆண்டு கனடாவில் மாவீரர் தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தேன். கனடா நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நான் தங்கி இருந்தபோது அந்த நாட்டு போலீசார் எனது அறைக்கு வந்தனர். என்னை கைது செய்வதாக தெரிவித்தனர். மேலும் மாவீரர் தின கூட்டத்தில் நான் பேசக்கூடாது என்றும் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கூறி என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக கூறிக் கொள்பவர்கள் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பது ஏன்? இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவீரர் தினம் !

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இலங்கை கடந்த தமிழ் ஈழ அரசுக்கான செயற்குழுத் தலைவர் ருத்திரகுமாரன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘’தமிழ் ஈழப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் லட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்.

மாவீரர்களின் தியாகமும், வீரமும் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும். நாடு கடந்த தமிழ் ஈழ அரசை வரும் புத்தாண்டில் உருவாக்கி, அதன் வழியே எங்கள் மாவீரர்களின் லட்சியங்களை நிறைவேற்ற, அவர்களது கனவுகளை நனவாக்க அனைவரும் உழைப்போம் என இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்’’என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒபாமா கடிதம்....

சிங்கள அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக இலங்கை பத்திரிக்கையாளர் திசநாயகம் ராஜபக்சே உத்தரவினால் கைது செய்யப்பட்டார்.

பலவேறு தரப்பினரும் அவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கொஞ்சம் கூட ராஜபக்சே அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காததால் திசநாயகம் இன்றும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை விடுதலை செய்யக்கோரி இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து இலங்கை செய்தியாளர்களிடம் ராஜபக்சே, ’’சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திசநாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடிதம் அனுப்பியுள்ளார். திசநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்று அந்த கடிதத்தில் ஒபாமா கேள்வியெழுப்பியுள்ள்ளார்’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்சே, ‘’ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன்.

முன்பு ஒருமுறை என்மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நான் உரிய முறையில் வழக்கறிஞர் மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியளித்தவர்கள் பொய் சாட்சி சொன்னமைக்காக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திசநாயகமும் தனது தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். இதனை விடுத்து திசநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.
திசநாயகத்தை விடுவிக்குமாறு ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நானாக இதற்கு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை அவமதித்தாக அமைந்துவிடும்’’என்று தெரிவித்துள்ளார்.

பிரணாப் பயணத்தில் பயனில்லை : பாஜக

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க உதவாது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசரமாக கொழும்பு விரைந்துள்ளார். அவரது கொழும்பு பயணத்தால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பிரச்சûனையும் தீர்ந்து விடப்போவதில்லை. இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு சலுகைகளையும், வாழ்வாதாரங்களையும் வழங்க போவதில்லை. இந்திய அரசும் அதைப் பெற்றுத் தரப்போவதில்லை. இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று திரும்பியது. இந்த குழுவால் இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. வெறும் அறிக்கைகளை சமர்ப்பித்ததோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது. இப்போதுள்ள மத்திய, மாநில அரசுகளால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டதும் இல்லை. ஏற்படபோவதும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காக வருகிற பாராளுமன்ற கூட்டத்தில் பாஜக நிச்சயம் குரல் கொடுக்கும் என்றார்.

மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் கண்டி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படித்து வந்த தமிழ் மாணவி ஒருவரை வகுப்பறையில் வைத்து சிங்கள புலனாய்வுப் போலீசார் பிடித்துச் சென்றனர். இவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி முதலில் அங்குள்ள உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் பின்னர் அவரை கொழும்புக்கு அழைத்துச் சென்று விட்டனர். இந்த மாணவி கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மற்ற தமிழ் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் நாளை......

ஈழம் -மௌனத்தின் வலி’ புத்தக வெளியீடு (நவம்பர் 14 சனி) மாலை 4.30க்கு சென்னை எழும்பூர், காசா மேஜர் சாலையில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

கமலஹாசன் , சத்துரு ஜக்கி வாசுதேவ் ,வைரமுத்து , நக்கீரன் கோபால், கனிமொழி ,சூர்யா , சத்தியராஜ் , பிரகாஸ்ராஜ் , நந்திதாஸ் , பேராயர் சின்னப்பா , ஏ.ஆர்.ரகுமான் ,அப்துல் ரகுமான் , அனிதா பிரதாப் ,அருந்ததி ராய் . ,ஏ.ஆர் ,முருகதாஸ் , இயக்குநர்கள் சேரன் ,பாலாஜி சக்திவேல் ,தாமரை , பாலா , சீமான் ,அமீர் ,மிஸ்கின் , அஜயன் பாலா ,அழகிய பெரியவன் , நா.முத்துகுமார் , அறிவுமதி ,தபு சங்கர் , யுக பாரதி ,கபிலன் , லிங்குசாமி , இன்குலாப் , பா.விஜய் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை பதிவு செய்கிறார்கள்.

தமிழ் இளைஞரை கடலில் வைத்து அடித்துக் கொன்ற சிங்களர்கள்

மன நலம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞரை கடலில் வைத்து வெறித்தனமாக சிங்களக் கும்பல் ஒன்று தாக்கிக் கொலை செய்துள்ள சம்பவம் இலங்கையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் விஷ மனோபாவம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வியாழக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் சிவக்குமார் என்ற 26 வயது இளைஞரை சிங்களக் கும்பல் துரத்தியது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். சிவக்குமார் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

வாகனங்கள் மீதும், ரயில் மீதும் அவர் கல் எறிந்தார் என்று கூறி சிங்களர்கள் துரத்தித் தாக்கினர். அவர் தமிழர் என்று தெரிய வந்ததும் மூர்க்கத்தனமாக துரத்தினர். இதனால் பயந்து போன பாலகிருஷ்ணன் கடலில் குதித்தார்.

ஆனால் அவரை தொடர்ந்து துரத்திச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த அப்பாவி தமிழ் இளைஞரை கொடூரமாகத தாக்கினார். கையில் இருந்த பெல்ட்டால் சரமாரியாக அடித்தார். கையெடுத்துக் கும்பிட்டபடி தன்னை விட்டுவிடுமாறு அந்த இளைஞர் கெஞ்சியும் கூட மனிதாபிமானமே இல்லாமல் அந்த போலீஸ் அதிகாரி அடித்தார்.

இதில் காயமடைந்து கடலில் மூழ்கிய அந்த இளைஞர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் ஒருவரால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு இலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது.

போராட்டம்...

இந்தக் கோர சம்பவத்தைக் கண்டித்து நவம்பர் 4ம் தேதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?

ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது.
‘தமிழினப் படையணி’ என்ற அமைப்பைச் சேர்ந்த 30 பேர் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலின் முன்பு திரண்டனர்.

ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்த ராஜபக்சவிற்கு அனுமதி அளிக்காதே! திருப்பதி தேவஸ்தானமே ராஜபக்சவை திருப்பி அனுப்பு! என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் தேவஸ்தான கோயிலின் முன்பு மறியல் செய்தனர்.


கொலைக்கார ராஜபக்சவிற்கு திருக்கோயில் பரிவட்டமா?
இனப் படுகொலை செய்தவனுக்கு பூரண கும்ப மரியாதையா?
என்று முழக்கங்கள் இட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவலர்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.