மன நலம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞரை கடலில் வைத்து வெறித்தனமாக சிங்களக் கும்பல் ஒன்று தாக்கிக் கொலை செய்துள்ள சம்பவம் இலங்கையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் விஷ மனோபாவம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வியாழக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் பாலகிருஷ்ணன் சிவக்குமார் என்ற 26 வயது இளைஞரை சிங்களக் கும்பல் துரத்தியது. அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். சிவக்குமார் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
வாகனங்கள் மீதும், ரயில் மீதும் அவர் கல் எறிந்தார் என்று கூறி சிங்களர்கள் துரத்தித் தாக்கினர். அவர் தமிழர் என்று தெரிய வந்ததும் மூர்க்கத்தனமாக துரத்தினர். இதனால் பயந்து போன பாலகிருஷ்ணன் கடலில் குதித்தார்.
ஆனால் அவரை தொடர்ந்து துரத்திச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த அப்பாவி தமிழ் இளைஞரை கொடூரமாகத தாக்கினார். கையில் இருந்த பெல்ட்டால் சரமாரியாக அடித்தார். கையெடுத்துக் கும்பிட்டபடி தன்னை விட்டுவிடுமாறு அந்த இளைஞர் கெஞ்சியும் கூட மனிதாபிமானமே இல்லாமல் அந்த போலீஸ் அதிகாரி அடித்தார்.
இதில் காயமடைந்து கடலில் மூழ்கிய அந்த இளைஞர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் ஒருவரால் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு இலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது.
போராட்டம்...
இந்தக் கோர சம்பவத்தைக் கண்டித்து நவம்பர் 4ம் தேதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment