நீதி கிடைக்குமா???

லிபரான் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அறிக்கை மீதான விவாதம் வியாழக்கி‌ழமையன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் லிபரான் அறிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சையால் லோக்சபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இன்று நடந்த கேள்வி நேரம் நண்பகல் 12.00 மணிக்கு முடிந்ததும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நீதிபதி லிபரான் விசாரணை ஆணைய அறிக்கையையும், அதன் மீது அரசு எடுத்த நடவடிக்கையை விளக்கும் அறிக்கையையும் தாக்கல் செய்தார்.“அவைத் தலைவர் அவர்களே, 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி இடிக்கப்பட்ட இராம் ஜன்ம பூமி, பாபர் மசூதி குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரான் அயோத்தியா விசாரணை ஆணைய அறிக்கையின் ஆங்கில வடிவத்தையும், அதன் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையையும் இந்த அவையில் சமர்ப்பிக்கின்றேன்” என்று அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

“1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி இடிக்கப்பட்ட இராம் ஜன்ம பூமி, பாபர் மசூதி” என்று அமைச்சர் சிதம்பரம் படித்தபோது பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் பலர் உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கமிட்டதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
17 ஆண்டுக் காலம் விசாரணை நடத்திய நீதிபதி லிபரான், கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.

ஆனால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த நிலையில், லிபரான் ஆணைய அறிக்கையின் சில பகுதிகள் மட்டும் ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 comments: