Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

பேச்சுவார்த்தைக்கு தயார்!

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எந்த அமைப்பினருடனும் அல்லது தனிநபர் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் வன்முறைச் சம்பவங்கள் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பாக விவாதிக்க இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மன்மோகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வன்முறையாளர்கள், போலீசார், பாதுகாப்புப் படையினரால் பலர் உயிரிழந்தது குறித்தும், காயமடைந்தது குறித்தும் கவலை தெரிவித்த பிரதமர், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், ஆனால் வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் இல்லாத சூழ்நிலையில் பேசுவது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதுதான் உண்மை என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

வாகுபெற்றவுடன் வாக்கு மாறிய MP

ராமநாதபுரம்: "சேதமடைந்த வீடுகளுக்கு தீர்வளிப்பதாக,' நன்றி அறிவிப்பின் போது ரித்தீஷ்குமார் எம்.பி.,கூறி சென்றும், நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் கலெக்டரிம் மனு அளித்தனர். திருப்புல்லாணி ஒன்றியம் நல்லான்குடியிருப்பு காலனியில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு தரப் பட்ட வீடுகள், எந்நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கவேலன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலில், ரித்தீஷ்குமார் எம்.பி., வெற்றி பெற்று நன்றி அறிவிப்புக்கு செல்லும் போது, இப்பகுதி மக்கள் தங்கள் நிலை குறித்து முறையிட்டுள்ளனர். ""நடவடிக்கை எடுப்பதாக, '' எம்.பி.,யும் உறுதியளித்து சென்றுள்ளார்.

அதன் பின் அதற்கான எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து மழை, புயல் என அபாயகரமான வீட்டில் வசித்து வெறுத்து போன மக்கள், வழியின்றி கலெக்டரிடம் முறையிட வந்தனர்.

ராமவள்ளி: எங்கள் வீட்டின் நிலையை பார்த்தால் யாரும் வசிக்க முன்வரமாட்டார் கள். முறையிடாத ஆட்கள் இல்லை. எந்த நடவடிக்கையும் இல்லை.
சாந்த்தா : தேர்தல் வெற்றிக்கு நன்றி கூற வந்த ரித்தீஷ்குமார் எம்.பி., யிடம் இது குறித்து முறையிட்டோம். அவரும் செய்து தருவதாக கூறி சென்றார். அதன் பின் எந்த தகவலும் இல்லை.

சரஸ்வதி : வழியின்றி கலெக்டரிடம் முறையிட வந்தோம். ஆனால் கலெக் டரோ, ரித்தீஷ் எம்.பி.,யிடம் செல்லுமாறு கூறியுள்ளார். அவர் இங்கு இல்லை, எப்படி முறையிடுவது என்பதும் தெரியவில்லை, என்றனர்.

சட்டசபை ஒத்திவைப்பு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் மேற்கொண்டதால், தெலுங்கானா பகுதியில் அடங்கிய மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து தனி தெலுங்கானா கோரிக்கையை ஏற்றுக்கொள்வது என மத்திய அரசு முடிவு செய்தது.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 105 எம்.எல்.ஏ.க்கள் நேற்று (10.12.2009) தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் 52 பேர் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 42 பேர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும், 11 பேர் பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் சேர்ந்தவர்கள்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள போதும், ஆந்திர மாநில எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்த‌னர்.

இந்நிலையில் இன்று காலை சட்டசபை தொடங்கியவுடன் ‌தனி தெலுங்கானாவுக்கு காங்கிரஸ் கட்சி உள்பட மற்ற எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஷ்டிரிய சமிதி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே அவை ஒத்திவைக்கப்பட்டது.

மர்ர்ச்சிஸ்ட் எதிர்ப்பு ...

ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி போராட்டம் வலுத்துவருகிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, ஆந்திராவில் தற்போது நிலவி வரும் பதட்டத்தைக் குறைக்க மத்திய அரசு சில நல்ல நடவடிக்கைகளை எடுத்த போதும், தனி மாநிலம் அளிப்பது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி எதிர்ப்பதாக தெரிவித்தார்.
புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது என்பது நீண்ட கால நடவடிக்கை. இந்த சூழ்நிலையில் அனேக மாநிலங்களில் இத்தகைய கோரிக்கைள் எழுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன்....

ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டை கூறி வரும் எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக அமைச்சரவையில் இடம்பெற்று உள்ள ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமாக பெல்லாரியில் ஓபலாபுரம் கனிம நிறுவனம் இயங்கி வருகிறது. இதன்மூலம் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர எடியூரப்பாவிடம் சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்து பேசிய அவர்,
கர்நாடகத்தில் சுரங்க கனிம ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால், மாநிலத்தில் அவர்கள் கூறுவதுபோல் சுரங்க ஊழல் எதுவும் நடைபெறவில்லை. நான் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு புதிய கனிம சுரங்க குவாரிக்கு லைசென்சு எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் சவால்களை சந்திக்க நான் தயாராக உள்ளேன்.

காங்கிரசில் இணைகிறார் பால்தாக்ரே மருமகள் !

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என மராட்டிய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஹுசைன் தல்வாய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு ஹுசைன் தல்வாய் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் ஸ்மிதா எப்போது இணைவார் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. எனினும் காங்கிரஸில் இணைவதில் ஸ்மிதா உறுதியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஸ்மிதா இணைவதன் மூலம் சிவசேனாவில் பால் தாக்கரேவுக்கு பிறகு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் யாருமில்லை என்பது தெரிய வருகிறது” என்று கூறியுள்ளார்.

தற்போது 48 வயதாகும் ஸ்மிதா, மராட்டிய மக்களுக்கு சிவசேனா சரியான சேவையாற்றவில்லை எனக் கருதுவதாகவும், குறுகிய மனப்பான்மை கொண்ட சிவசேனாவின் கொள்கையில் அவருக்கு நம்பிக்கையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தேர்தலில் மோதல் .

நெல்லையில் நடந்த அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலில் உட்கட்சி மோதல் வெடித்தது . அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவுகிறது.

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கோஷ்டியினருக்கும் எதிர் தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், தேர்தல் நடைபெறும் இடத்தில் இருந்த சேர்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டன. இதில் இரு தரப்புக்கும் இடை‌யே கடும் வாக்குவாதம் நடந்தது.
இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது .

ச ம க சாதி கட்சியா?


மக்கள் நலனுக்காக செயல்படாமல் ஜாதிக் கட்சி போன்று அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி செயல்படுகின்றது. அதனால் நான் அந்த கட்சியில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாநகர் செயலாளர் உபைதூர் ரகுமான் தெரிவித்துள்ளார். இது குறித்து உபைதூர் ரகுமான் கூறுகையில்,

சரத்குமார் திரையுலகிற்கு வந்த போது அவருக்காக ரசிகர் மன்றம் வைத்து கடந்த 18 வருடமாக பணியாற்றினேன். அவர் திமுகவில் இணைந்த போது திமுகவில் இணந்தோம். அதில் இருந்து அவர் விலகி அதிமுகவில் சேர்ந்த போது நாங்களும் அதிமுகவில் இணைந்தோம்.

அவர் தனிக் கட்சி தெடங்கி பிறகு அதில் கடந்த 2 வருடமாக பணியாற்றி வருகின்றேன். பிறகு தேர்தலில் அவர் பாஜக கூட்டணி என்ற போதும் கூட அவருடன் தான் இருந்தோம் . கட்சியின் பெயரில் தான் சமத்துவம் உள்ளதே தவிர உண்மையில் அங்கு சமத்துவம் இல்லை. அந்த கட்சியில் நாடார் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத் தான் உரிய பதவிகளும், மரியாதைகளும் அளிக்கப்படுகின்றது.


மற்றவர்களை அவர்கள் தங்களது நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் நான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாநகர் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.

யாரும் பிரதமர் ஆகலாம் !

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். எதிர்காலத்தை யாராலும் கணித்துவிட முடியாது. எனவே, நான் தான் வருங்கால பிரதமர் என்று கருதவேண்டாம். யாரும் என்னை வருங்கால பிரதமர் என்று அழைக்கவேண்டாம்.
பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்’’ என்று தெரிவித்தார்.

பதவிவிலக தயார்

விரைவில் பதவி விலக ‌தயாராக இருப்பதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் விரைவில் தான் வகிக்கும் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராஜ்நாத்சிங் தனது பதவிக்காலம் விரைவில் முடிய இருப்பதாகவும். அதனால் விரைவில் தான் பதவி விலக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மு.க. அழகிரி ஆய்வு!

மேலூர் அம்பலக்காரன்பட்டியில், டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே, அம்பலக்காரன்பட்டியில் 266 ஏக்கர் பரப்பில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இந்தோனேசிய தொழில் அதிபர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

அழகிரி பேசுகையில், "இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யும்படி கூறினேன். இதையடுத்து, அந்நாட்டின் பெரிய தொழில் நிறுவனமான "டெக்ஸ்மேக்கோ' மதுரையில் டிராக்டர் தொழிற்சாலை நிறுவ முன்வந்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டிராக்டர்கள் கிடைக்கும். "இக் கம்பெனியின் இயக்குனர் சீனிவாசன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர். இத்தொழிற்சாலை அமையும்போது மூவாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.


இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், "இங்கு இரும்பு, விவசாய தளவாடங்கள் உற்பத்தியும் துவங்கப்படும்' என்றார். கலெக்டர் மதிவாணன் கூறுகையில், "இந்த இடம் வருவாய்த் துறைக்கு உட்பட்டது என்பதால் நில ஆர்ஜிதம் செய்வதில் காலதாமதம் ஏற்படாது. தொழில் துவங்கும்பட்சத்தில், உடனடியாக நில ஆர்ஜிதம் செய்யப்படும்' என்றார்.


கல்குவாரி தொழிலாளர்: ஒத்தக்கடை யானைமலையில், கல்குவாரி தொழிலாளர்களுக்கு கல் உடைக்க தற்காலிக அனுமதியை அமைச்சர் மு.க.அழகிரி வழங்கினார். அவர் கூறுகையில், ""கடந்த 20 ஆண்டுகளாக கல்உடைக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள், இப்பகுதியில் கல்உடைக்க 10 நாட்களுக்கு முன் அனுமதி கோரினர். முதல்வரிடம் கூறி அனுமதி பெற்றேன். நானூறு பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

நான் ஜோசியகாரனா?

நெல்லை மாவட்டத்துக்கு செல்வதற்காக தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்திறங்கினார் காங்., கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்.
அங்கே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, காங்கிரஸ்., - தி.மு.க., கூட்டணி வலுவாக தான் இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த உறவு எப்படி இருக்கும் என்று கணித்துச் சொல்ல நான் ஒன்றும் ஜோசியக்காரன் இல்லை என தெரிவித்தார்.

உயிருக்கு உழை வைக்கும் ஊழல்

நீலகிரி நிலச்சரிவு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா மலை பகுதிகளில் 1000வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன. 1400 ஏக்கர் விளைபயிர் சேதம் அடைந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவின்றி, பணம் இல்லாமல் அத்தியாவசிய பொருள் வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

ஊட்டி மலை பகுதி துண்டிக்கப் பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் அரசின் சார்பில் அதிகாரிகள் யாரும் வந்து தங்களை சந்திக்கவில்லை என்றும் முழுமையாக நிவாரண உதவி கிடைக்க வில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தே.மு.தி.க. கட்சியினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய் கின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்க வில்லை என்றும் வெறும் 2ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு அதிகாரிகள் பின் வாங்குகிறார்கள் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதுகாப்பான வீடுகட்டி கொள்ள அரசு அனுமதித்து அதற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். அங்குள்ள ராலி அணை நிரம்பி உள்ளது. அதன் நீர்கசிவு நிலத்தடி நீராக வந்து வீடுகளுக்கு சேதம் விளைவிக்கும் என பயப்படுகின்றனர்.


அந்த நீரை உரிய முறையில் வெளியேற்றி அணையை கண்காணிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் இவ்வளி பேரழிவு எப்போது நடந்ததோ அன்றைய தினமே ராணுவத்திடம் அந்த பகுதியை ஒப்படைத்து ராணுவ சாதனங்களை பயன்படுத்தி இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகள் உடனே சென்று அடைந்திருக்க முடியும். உயிர் சேதத்தையும் ஓரளவு தடுத்திருக்க முடியும். மத்திய அமைச்சரின் தொகுதியாக இருந்தும் பெயரளவுக்கு 2 மாநில அமைச்சர்கள் மட்டுமே சென்று உடனே திரும்பி விட்டனர். மத்திய-மாநில அரசுகள் உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றவில்லை.


காடுகளை அழித்தும், மரங்களை வெட்டியும் கண்ட இடங்களில் சட்டத்துக்கு புறம்பாக வீடுகள் அமைய காரணமே அரசியல்வாதிகள் அதிகாரிகளின் லஞ்ச ஊழல் தான்.


இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இனியாவது நீலகிரி மாவட்ட மக்களை காப்பாற்ற அரசு துரிதமாக செயல்படுமா? என்பது பெரிய கேள்வி. கையை கட்டிக்கொண்டு வெறுமனே ஒரு அரசு இருந்துவிட கூடாது. அரசு துறையில் தாண்டவமாடும் ஊழல், மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கிறது என்பதை தான் இயற்கை நமக்கு சுட்டி காட்டுகிறது’’என்று தெரிவித்துள்ளார்.

அகதிகள் முகாம்கள் மேம்பாடு

முதல்வர் முடிவு
முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் உள்ள முகாம்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை முதல்வரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பான கூட்டம் இன்று சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் காங்கிரசில் இணைந்தார்

முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தற்போது டெல்லி மேல்-சபை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். இன்று அவர் பா.ஜ. கட்சியில் இருந்து விலகினார்.
டெல்லி மேல் சபை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்த அவர், மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.