பேச்சுவார்த்தைக்கு தயார்!

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எந்த அமைப்பினருடனும் அல்லது தனிநபர் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் வன்முறைச் சம்பவங்கள் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பாக விவாதிக்க இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மன்மோகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வன்முறையாளர்கள், போலீசார், பாதுகாப்புப் படையினரால் பலர் உயிரிழந்தது குறித்தும், காயமடைந்தது குறித்தும் கவலை தெரிவித்த பிரதமர், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், ஆனால் வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் இல்லாத சூழ்நிலையில் பேசுவது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதுதான் உண்மை என பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

0 comments: