திருச்சி, மாவட்டம் லால்குடி அருகே கூகூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). வேன் டிரைவர். இவர்கள் மோட்டார் சைக்கிள் மோதி காயம் அடைந்தனர். பிரபாகரனை உறவினர்கள் திருச்சி உறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 24-ந் தேதி முதல் பிரபாகரன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 1 மணிக்கு பிரபாகரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் 3 நாட்கள் சிகிச்சை அளித்த வகையில் கட்டணம் ரூ. 1 1/2 லட்சம் கொடுக்குமாறு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.
பணம் கொடுத்தால் தான் பிணத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று கூறினர்.
இந்த நிலையில் இன்று காலை பிரபாகரனின் உறவினர்கள் 50 பேர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும். பிரபாகரன் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
24-ந்தேதி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரபாகரனை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவே இல்லை என்றும் மறுநாளே (25-ந் தேதி) பிரபாகரன் இறந்து விட்ட நிலையில் ரமணா படபாணியில் பணத்துக்காக பிணத்துக்கு சிகிச்சை அளித்து உள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அப்போது திடீர் என ஆஸ்பத்திரி மீது கல் வீசப்பட்டது. இதில் ஆஸ்பத்திரி கண்ணாடி உடைந்தது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்தது.
ஆஸ்பத்திரி மீது கல் வீசி ரகளை செய்ததாக பிரபாகரனின் உறவினர்கள் 25 பேரை போலீசார் வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே பிரபாகரனின் பிணம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
0 comments:
Post a Comment