கலைஞர் இன்று தஞ்சை பயணம்

தஞ்சை பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


முதலமைச்சர் கருணாநிதி பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் 1.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்.


விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலமாக தஞ்சாவூர் போகிறார். இன்று மாலை நடைபெறும் விழாவிலும், நாளை மாலையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் நிறைவுவிழா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசுகிறார்.


விழாவின் 4-வது நாளான இன்று காலை 10.30 மணிக்கு பெரியகோவில் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். கவிஞர் கனிமொழி எம்.பி. வரவேற்றுப்பேசுகிறார்.

மாலை 5.45 மணிக்கு திருமுறை இன்னிசை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது. 7.30 மணிக்கு இசை மற்றும் நடனக்கலைஞர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பிரபல நடன கலைஞர் பத்மாசுப்பிரமணியம் குழுவினரின் 1000 நடனக்கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் புகழேந்தி, கலைவாணன் குழுவினரின் ராஜராஜசோழன் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு நிறைவு விழா பேருரை ஆற்றுகிறார்.

மத்திய மந்திரி ஆ.ராசா, பெரியகோவில் மற்றும் ராஜராஜசோழன் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொள்கிறார். மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆயிரம் ஆண்டு நினைவு 10 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொள்கிறார்.

முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்கும் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் பெரியகோவில் வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் 21 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரின் எங்கு பார்த்தாலும் மின் விளக்கு அலங்காரமாக காட்சி அளிக்கிறது. பெரியகோவில் மற்றும் தஞ்சையில் உள்ள கோபுரங்கள், அரண்மனை, மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், கோவில்கள், அரசு அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

0 comments: