திமுகவுக்கு நாடார் பாதுகாப்பு பேரவை ஆதரவு
இவ்வமைப்பின் தலைவர் எஸ்.ஏ. சுபாஷ் பண்ணையார், பேரவை நிர்வாகிகளுடன் சனிக்கிழமை திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை சந்தித்து இதற்கான ஆதரவு கடிதத்தை கொடுத்தனர்.
அக்கடித்தில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, ஸ்ரீவைகுண்டம் அணை மணல் மேடாகி, அதன் கொள்ளளவு குறைந்து விட்டது. இதனால், வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆதலால் ஸ்ரீவைகுண்டம் அணையை சீர்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இச்சந்திப்பின் போது திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.எம்.பி. இயக்குநர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திமுகவுக்கு ஆதரவு: ஏ.சி.சண்முகம்
வந்தவாசி, திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும் என கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.ஆரணியில் ஜவுளி பூங்காவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையைவிட கூடுதலாக விலை அளிக்க மாநில அரசு விரும்பினால் அதனை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி புதிய மசோதா கொண்டுவர வேண்டும்.
நீதிக்கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் டிச.6 ல் ஆரணியில் நடக்கிறது. கூட்டத்தில் வந்தவாசி இடைத்தேர்தலில் கட்சியினர் பணி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மீன் பிடித் தொழிலுக்கு கொண்டு வந்த ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றார்.
திமுகவுக்கு ஆதரவு?
நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவிப்பை அக்கட்சித் தலைவர் சரத்குமார் வரும் 27ல் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவதா அல்லது மற்ற கட்சியுடன் கூட்டணி சேர்வதா அல்லது மற்ற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது பற்றி விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தனித்து போட்டியிடலாம் என்று சரத்குமாரை கட்சியினர் சிலர் கேட்டுக்கொண்டதாகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று பெரும்பாலானோர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அனைவருடைய கருத்துக்களை கேட்ட சரத்குமார் இது பற்றி வரும் 27ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் மாநில நிர்வாகிகளுடன் மீண்டும் கலந்து பேசி இது பற்றிய முடிவை அறிவிப்பதாக கூறினார். அதன்படி நாளை மறுநாள் கட்சி அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் நடக்கிறது.
இக் கூட்டத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கும் என்ற அறிவிப்பை கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிடுவார் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.