துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கிய பிச்சைக்காரர்

துபாயில் 5 நட்சத்திர ஓட்டலில் பிச்சைக்காரர் ஒருவர் தங்கியிருந்தார். வளைகுடா நாடுகளில் பிச்சை எடுக்கும் தொழில் மிகவும் பரபரப்பாக நடை பெற்று வருகிறது. சுற்றுலா விசாவில் வரும் உடல் ஊன முற்றவர்கள் மற்றும் சிலர் பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். ஏனெனில் வசதி படைத்த இந்த நாடுகளில் பிச்சைக்காரர்களுக்கு தாரளமாக பணம் கிடைக்கிறது.

எனவே, இங்கு அதிக அளவில் குவிகின்றனர். இந்த நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி துபாய் நாட்டில் ரோட்டில் சுற்றித்திரிந்த 360 பிச்சைக்காரர்களை அந்நாட்டு சுற்றுலா துறை கைது செய்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரு நபர் துபாயில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பது தெரியவந்தது. இது விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

பிச்சை எடுப்பதன் மூலம் தனக்கு அதிக அளவில் பணம் கிடைப்பதால் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதாக அவர் கூறினார். இந்த தகவலை துபாய் சுற்றுலா பாதுகாப்பு துறை இயக்குனர் மேஜர் முகமது ரஷீத் அல் முனகரி தெரிவித்தார்.

பிச்சை எடுப்பதற்காக தற்போது 5-வது தடவையாக அங்கு சுற்றுலா விசாவில் வந்திருப்பதாக உடல் உறுப்பை இழந்த பிச்சைக்காரர் ஒருவர் கூறினார். ஆனால், அவர்களின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

ரமலான் பண்டிகையின் போது மசூதிக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்.

0 comments: