ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் யார்?

உலகில் தேவையுள்ளவர்கள் என்று ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தரத்திலிருப்பவர்களல்ல. இவர்களில் நிரந்தர தேவைக்குட்பட்டவர்கள், தற்காலிக தேவையுள்ளவர்கள் என்று வேறுபடுவார்கள். பொருள் வசதியற்றவர்கள் மட்டும் தான் தேவையுடையவர்கள் அந்த வசதியைப் பெற்றவர்களுக்கு எந்த தேவையும் இருக்காது என்றெல்லாம் இஸ்லாம் முடிவு செய்யவில்லை. என்னதான் பொருளாதார வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சூழ்நிலையால் சில நேரம் அவர்கள் கூட தேவையுள்ளவர்களாகி விடலாம் என்பதால் ஜகாத் பெற தகுதியானவர்களை இஸ்லாம் மிக விரிவாக பட்டியலிட்டுள்ளது.


அவர்கள் எட்டு வகையினர்:

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

1) பரம ஏழைகள்,

2) ஏழைகள்,

3) இந்தப் பணியில் ஈடுபடும் உழைப்பாளர்கள்,

4) இஸ்லாத்தை மனதார விரும்புபவர்கள்,

5) அடிமைகளாக சிறைப்பட்டவர்கள்,

6) கடன்பட்டுள்ளவர்கள்,

7) ராணுவ வீரர்கள்,

8) பயணிகள் (வழிப்போக்கர்கள்)


இந்த எட்டுத் தேவைகளுக்குத் தான் ஜகாத் என்ற பொருளாதார பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா நற்பணிகளுக்கும் ஜகாத் தொகையை பயன்படுத்தலாம் என்ற போக்கு பரவலாக முஸ்லிம்கள் (குறிப்பாக நற்பணியில் ஈடுபடுபவர்களின்) மனங்களில் விரிந்துள்ளன. அதனால் தான் பள்ளிவாசல்கள், மரதஸாக்கள், திருமணங்கள், இன்னப் பிற நற்பணிகளுக்காக விளம்பரங்கள் - பயான்கள் (பயான்கள் ஜகாத் ஸ்பெஷலாகவே நடக்கும்) வழியாக ஜகாத் திரட்டும் நிலையைப் பார்க்கிறோம். பொதுவாக அனைத்து நற்காரியங்களுக்கும் ஜகாத்தை பயன்படுத்தலாம் என்றால் எட்டு என்ற எண்ணிக்கையையும், அந்த எட்டில் இன்னாரெல்லாம் அடங்குவார்கள் என்ற விளக்கத்தையும் இறைவன் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஐந்து நேரத் தொழுகை என்று இறைவன் வரையறுத்து அந்த நேரங்களும் குறிப்பிடப்பட்டு விட்டப் பிறகு எல்லாவித தொழுகைகளும் இதில் அடங்கும் என்று சுன்னத் - உபரி போன்ற தொழுகைகளை எப்படி பர்ளுடன் இணைத்துப் பேச முடியாதோ அது போன்றுதான் இதுவும்.

அனைத்து நற்பணிகளுக்கும் ஜகாத்தை பயன்படுத்தலாம் என்ற சிலரது முடிவால் - பிரச்சாரத்தால் - ஜகாத்துடைய தீர்க்கமான நோக்கம் அடிப்பட்டுப் போய்விடுவதை நாம் மறந்து விடக் கூடாது.

இறைவன் சொன்ன எட்டுப் பேர்களில் நம்மோடு இரண்டற கலந்து வாழ்பவர்கள் மூன்று வகையினர். 1) பரம ஏழைகள் 2) ஏழைகள் 3) கடன்காரர்கள். இவர்கள் சமூகத்தில் மிகைத்து நிற்கும் போது புதிய மதரஸாக்கள் உருவாகின்றன. புதிய பள்ளிவாசல்கள் உருவாவதற்கும், இருக்கும் பள்ளிகளை விஸ்தீரனப்படுத்துவதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்படுகின்றது.

தெளிவாக சொல்ல வேண்டுமானால் எந்த நோக்கத்திற்காக ஜகாத் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எந்த நோக்கத்திற்காக ஜகாத் உருவாக்கப்படவில்லையோ அந்த நோக்கத்திற்காக ஜகாத் தொகை பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

யாருக்கு எது தேவையோ அதை நன்கறிந்தவன் இறைவன் மட்டும் தான். அவன் 'இன்னாருக்குத் தான் இந்த தொகை செலவழிக்கப்பட வேண்டும்' என்று பட்டியலிட்டு சொல்லி இருக்கும் போது அதை மாற்றிக் கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை சம்பந்தப்பட்வர்கள் விளங்க வேண்டும்.

இறைவன் யாரைக் குறிப்பிட்டுள்ளானோ அவர்களை செல்வந்தர்கள் கூடுதலாக நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

1) பரம ஏழைகள். (ஃபக்கீர்கள்)

இவர்கள் யார்? விளக்கமே தேவையில்லாத அளவிற்கு பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள். அவமானமாக இருந்தாலும் கையேந்துவதைத் தவிர வழி தெரியாதவர்கள். பிச்சைக்காரர்கள் என்று தமிழ் குறியீட்டுடன் அறியப்படும் இவர்கள் இந்தியாப் போன்ற நாடுகளில் கணிசமாக வாழ்கிறார்கள். வீடு வாசல் அற்ற நிலையில் பிளாட்ஃபாரங்களில், ஆங்காங்கே தெருவோரங்களில், சத்திரசாவடிகளில், பிறர் வீட்டுவாசல்; திண்ணைகளில், தர்காக்களில் என்று சுருண்டு படுத்துக் கொள்ளும் இடம் தேடி அலைபவர்கள். முதிய ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என்று அனைவரும் இதில் அடங்குவர்.

உலகில் நடக்கும் குற்றங்களுக்கு கணிசமாக இந்த பரம ஏழைகளும் துணை நிற்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் பண்பாடு அற்றுப் போய் பல்வேறு குற்றச் செயல்கள் சில நேரம் கடுங்குற்றச் செயல்கள் என்று பயிற்சிப் பெறுவது இது போன்ற வறுமையில் தான். சமூக துரோகக் கும்பலுக்கு இரையாகிப் போவதும் இத்தகையப் பொழுதுகளில் தான்.

பஸ் பயணங்களில்இ ரயில் பயணங்களின் போது சமூகத்தால் கை விடப்பட்ட இத்தகைய பரம ஏழைகளை இங்கொண்றும் அங்கொண்றுமாக பல இடங்களில் காண முடியும்.

ஒவ்வொரு ஜூம்ஆ பள்ளியிலும் ஜூம்ஆத் தொழுகைக்கு பிறகு இவர்களைக் காண முடியும்.

ஜகாத் திட்டத்தின் முதல் பங்குதாரர்கள் இவர்கள் தான். இவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பதற்காகவே ஜகாத் பெற தகுதியுள்ள குழுவில் முதலாவதாக இவர்களை இறைவன் இடம் பெற செய்துள்ளான்.

இத்தகைய ஏழைகள் இருக்கும் வரை 'இஸ்லாம் பொருளாதார திட்டத்தை சரியாக வகுக்கவில்லை' என்ற கருத்தே உலகில் நிலைப்பெறும்.

ஜகாத் நடைமுறைக்கு வந்த ஆரம்ப கால வரலாற்றிலிருந்து இன்றைக்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகள் வரை இத்தகைய அடிமட்ட ஏழைகளை பார்ப்பது மிக அறிதாகும். ஏனெனில் அங்கெல்லாம் ஜகாத் தொகையை வைத்து தீட்டப்படும் மறு வாழ்வு திட்டத்தில் இவர்கள் பலன் பெற்று தங்கள் வாழ்க்கைத் தரங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் ஏழைகள் இல்லையா..? என்ற சந்தேகம் எழுந்தால் 'இருக்கத்தான் செய்கிறார்கள்' என்ற பதிலை முன் வைப்போம். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் வாழும் அடிமட்ட ஏழைகளின் தரத்தில் உள்ளவர்களை அங்கெல்லாம் காணமுடியாது.

2) ஏழைகள். (மிஸ்கீன்கள்)

பரம ஏழைகள் என்ற நிலைக்கு அடுத்த இடத்தில் ஏழைகள் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வர்கங்களுக்கு மத்தியில் என்ன வித்தியாசம்?

அறிஞர்கள் சில - பல கருத்தோட்டங்களை இங்கு முன் வைத்துள்ளார்கள்.

அவை அனைத்துமே ஒன்றோடொண்று நெறுக்கமான தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன.

''ஃபக்கீர் - மிஸ்கீன்'' என்ற பதங்கள் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. தமிழ் படுத்தும் போது இரண்டுப் பதங்களையுமே ஏழைகள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஏழைகள் என்பதில் அந்த இரண்டு பிரிவினருமே அடங்கி விடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும் குர்ஆன் அவர்களை இரண்டு பிரிவினராக சொல்லியுள்ளதால் அவர்களை நாம் தனித் தனியாக இனம் கண்டாக வேண்டும்.

முதலில் அந்த பதங்கள் இடம் பெற்றுள்ள வசனங்களைப் பார்ப்போம்.

வறுமையைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;.(அல் குர்ஆன் 2:268).

தங்களுக்குரிய பன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.(அல் குர்ஆன் 22:28).

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள் ( அல் குர்ஆன் 59:8).

இந்தப் வசனங்களில் ஃபக்கீர் என்ற பதம் இடம் பெற்றுள்ளது. இவற்றில் முதலாவது வசனத்தில் ஷைத்தான் வறுமையைக் கொண்டு ஒழுக்கமில்லா காரியங்களை செய்ய தூண்டுகிறான் என்று இறைவன் குறிப்பிடுகிறான். ஃபக்கீர்தன்மை பகிரங்கமாக சில ஒழுக்கமில்லா செயல்களை செய்ய தூண்டிவிடும் என்று விளங்க முடிகிறது.

இனி மிஸ்கீன் என்ற பதங்கள் இடம் பெறும் சில வசனங்களைப் பார்ப்போம்.

உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக! மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரயஞ் செய்யாதீர் (அல் குர்ஆன் 17:26).

உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (அல் குர்ஆன் 30:38).

(அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும், அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (அல் குர்ஆன் 58:4).


இந்த வசனங்களில் 'மிஸ்கீன்' என்ற பதம் இடம்பெறுகிறது. இவர்களை இறைவன் உறவினர்களுடன் ஒப்பிட்டுக்காட்டுகிறான்.

இப்போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று சிந்திப்போம்.

ஃபக்கீர்தன்மை ஒழுக்கமில்லா காரியத்தை செய்ய தூண்டும் என்பதில் பிறரிடம் கையேந்துவதும் அடங்கும். யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இருப்பினும் கையேந்துபவர்களுக்கு கொடுங்கள் என்ற அறிவுரையையும் வழங்கியுள்ளது. கையேந்தக் கூடாது என்பது கையேந்த வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு சொல்லப்பட்ட அறிவுரையாகும். அதே சமயம் யாசகம் கேட்டு விட்டால் 'யாசகம் கேட்கக் கூடாது' என்பதை காரணம் காட்டி கொடுக்காமல் இருந்து விடாதீர்கள் கொடுங்கள் என்பது பொருளிருப்பவர்களுக்கு சொல்லப்பட்ட வழிகாட்டல்.

கையேந்தி யாசகம் கேட்கும் நிலையில் உள்ளவர்கள் வெகு சீக்கிரம் குற்றச் செயல்களில் ஈடுபட துவங்கி விடும் வாய்ப்புள்ளது. கையேந்த வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டவர்கள் இடம் நேரம் காலம் பார்க்காமல் கையேந்துவார்கள். சமூக துரோகிகளிடம் சென்று கையேந்தும் நிலை வரும் போது அந்தக் கயவர்கள் தங்களின் சட்ட விரோத காரியங்களுக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலை சர்வ தாராளமாக துவங்கி விடும். சமூக துரோகிகளிடமிருந்து கிடைக்கும் பணம் வயிற்றுப் பசியைப் போக்கி சற்று செழிப்பு நிலையை இவர்களின் வாழ்வில் ஏற்படுத்துவதால் தாம் செய்யக் கூடிய காரியங்களின் விளைவைப் பற்றி இந்த பரம ஏழைகள் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். தங்கள் செயல்களால் பிற எவர் பாதிக்கப்பட்டாலும் அது பற்றி இவர்களுக்கு எந்தக் குற்றவுணர்வும் இருக்காது.

விபச்சாரம் என்ற மாபாத செயல்களில் பெண்களை ஈடுபடுத்தும் கொடியவர்கள் இத்தகைய வறுமையில் வாடும் பெண்களை இலகுவாக தங்கள் வலையில் விழவைத்து விடுகிறார்கள். கொடிய வறுமை ஒழுக்கமுள்ள பல பெண்களைக் கூட விபச்சாரத்தின் பக்கம் தள்ளி விடுகின்றது.

பெண்குழந்தைகள் சில ஆயிரங்களுக்கு பேசி விற்கப்படுகின்றன. இந்தக் குழந்தைகள் அந்நிய மாநிலங்கள், நாடுகளுக்கு கடத்தப்பட்டு ஈனத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு பாழ்படுத்தப்படுகின்றன. தெரிந்த நிலையிலேயே பெற்றோர்களே இந்தக் காரியத்த செய்கிறார்கள் என்றால் வறுமையின் கோரம் எத்தகைய கொடியது?

சற்று நிதானமாக சிந்தித்தால் இந்த பெறு வறுமையால் சிதையும் மனித இனம், இந்த ஃபக்கீர்களால் ஏற்படும் ஒழுங்கீனங்கள் புலப்படும்.

எனவே இவர்களின் புணர்வாழ்விற்கு இஸ்லாம் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொள்கின்றது.

தான தருமங்களை ஊக்குவிப்பதோடு அல்லாமல் இஸ்லாத்தின் பொருளாதார கடமையிலும் இவர்களை கூட்டாளியாக்கி பொருளாதார பங்கீடலில் இவர்களுக்குத் தான் முதலுரிமை என்ற நிலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஜகாத் நிதி முதலாவதாக இத்தகைய பரம ஏழைகளுக்கு அவர்களின் வாழ்வு புணரமைப்பிற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இவர்களும் இவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களும் எல்லா ஊர்களிலும் கனிசமாக இருக்கும் போது செல்வந்தர்கள் பிற நற்பணிகளுக்கு தங்கள் ஜகாத்தை ஒதுக்குவது அதன் நோக்கத்தை பாழ்படுத்துவதாகும். எனவே ஜக்காத் பணத்தை பள்ளிவாசல்கள் - மதரஸாக்கள் போன்றவற்றிர்க்கு ஒதுக்குவதை புரந்தள்ளி இத்தகைய ஏழைகளின் நல்வாழ்விற்கு அதை பயன்படுத்த வேண்டும்.

ஜகாத் பெற தகுதியானவர்களில் அடுத்து இடம் பெறும் *மிஸ்கின்* ஏழைகள் என்றால் யார், குர்ஆன் சுன்னா யாரை ஏழை என்று குறிப்பிடுகின்றது என்பதைப் பார்ப்போம் இறைவன் நாடட்டும்.

0 comments: