முத்துப்பேட்டையில் செப். 18-ல் விநாயகர் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகள் சார்பில் செப். 18-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.


விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனித்தனியே நடத்தப்பட்டது. இக்கூட்டங்களுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு குறித்து நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஊர்வலம் செல்லும் பாதை, எழுப்பப்படும் கோஷங்கள் குறித்து இருதரப்பிடமும் சுமூகமான கருத்துகள் கேட்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பிற்பகல் 4 மணிக்குள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, மாலை 6 மணிக்குள் பாமணி ஆற்றில் கரைக்க விழா ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஊர்வலம் நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டவுள்ளது. விழா நடைபெறும் போது நடமாடும் மருத்துவக் குழுக்கள் உடன் செல்லவும், அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மூர்த்தி பேசியது:


கடந்த காலங்களில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலங்களின் போது நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 600 காவலர்கள் நிகழாண்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். தங்கவேல், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் துரைராஜ், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், இந்து அமைப்புகள் சார்பில் முருகானந்தம், கண்ணன், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப், அகமது பாசித், முகமது இப்ராஹீம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

0 comments: