போலீஸ் பற்றாக்குறை எதிரொலி : செயல்பட முடியாத போலீஸ் ஸ்டேஷன்

பட்டுக்கோட்டையில் போலீஸார் பற்றாக்குறையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் அவதிக்குள்ளாகின்றனர்.


பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களான பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், வண்டிப்பேட்டை, வடசேரி ரோடு, மண்டகப்படி, சுப்பையாபிள்ளை சாலை, தலைமை தபால் நிலையம், மைனர் பில்டிங், கைக்காட்டி உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் நான்குபுற போக்குவரத்து சாலையாக உள்ளது. ஒவ்வொரு இடத்துக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் நியமித்தால்கூட போக்குவரத்து நெரிசலை சீர் செய்வது சிரமம்.


குறிப்பாக, மணிகூண்டு பகுதியில் நகரின் முக்கிய கடைகள் அனைத்தும் உள்ளதால் வாகனம் வைத்திருப்பவர்கள் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்வது தவிர்க்க முடியாதது. அதேபோல் மணிக்கூண்டில் இருந்து அறந்தாங்கி முக்கம் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக அறிவித்தாலும் அரசு பஸ்கள், கார் வைத்திருப்போர் அதனை பின்பற்றாமல் அவ்வழியை பயன்படுத்துவதாலும், அந்த வழியில் இரண்டு பெரிய வங்கிகள் இருப்பதால் வங்கிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதாலும் எந்நேரமும் அந்த வழியில் 100 மீட்டர் சாலையை கடக்க 30 நிமிடம் ஆகிறது.


அதேபோல் சுப்பையா பிள்ளை சாலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரும் வழியில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., ரங்கராஜனுக்கு சொந்தமான மார்க்கெட் உள்ளது. மார்க்கெட் நிர்வாகம், சாலையோர வியாபாரிகளிடம் பணம் வசூலித்தலை எம்.எல்.ஏ., தரப்பினர் செய்வதால், சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து சாலையில் நடமாடக்கூட இடம் இல்லாத சூழ்நிலையில், அவர்களை அப்புறப்படுத்த போலீஸார், நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.


பத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையை ஒழுங்குப்படுத்த பட்டுக்கோட்டை போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் எட்டுக்கும் குறைவான போலீஸாரே உள்ளனர். அதில், ஒருவர் நீதிமன்றப்பணி, ஒருவர் எழுத்தராகவும், மற்றவர்களில் பெரும்பாலானோர் விடுமுறையில் அடிக்கடி செல்வதால் பட்டுக்கோட்டை போக்குவரத்து போலீஸில் பணிக்கு வரும் அதிகாரிகள் படும் சிரமம் மிக அதிகம்.


அதேபோல் பட்டுக்கோட்டை பகுதியில் சமீபகாலமாக திருட்டு மிக அதிகளவில் நடக்க குற்றப்பிரிவில் போலீஸார் இருக்கிறார்களா? என்பதே தெரியவில்லை. சட்டம் ஒழுங்கிலும் சில போலீஸார் பணிக்கு வராமல் உயர்அதிகாரிகளின் கூடுதல் தேவைகளை கவனித்து சுற்றி வருவதால் பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் எந்த பிரச்னை என்றாலும் வழக்கு பதிவு செய்யக்கூட மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது என்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். உயர்அதிகாரிகள் போதிய போலீஸாரை நியமித்து பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் சிறப்பாக செயல்பட நடவடிக் கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: