விரைவில் வருகிறது கோயம்பேடு மொத்த மளிகை மார்க்கெட்

கோயம்பேட்டில் பழம், காய்கறி, பூக்களின் மொத்த வியாபாரத்திற்கு மார்க்கெட் உள்ளது போன்று, அனைத்து மளிகை பொருட்களின் மொத்த வியாபாரத்திற்கான மார்க்கெட் விரைவில் அமைகிறது.பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் வசதிக்காக கோயம்பேடு பகுதியில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களுக்கான மொத்த வியாபாரம் செய்யும் நோக்கில் மார்க்கெட் கட்டப்பட்டது.இதே போன்று மிளகாய், மஞ்சள், சர்க்கரை, உளுந்து, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் மொத்த வியாபாரத்திற்கும் கடைகள் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வியாபாரிகள் எழுப்பி வந்தனர்.

அதனையொட்டி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) சார்பில் அதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்ட, இத்திட்டத்தை கொண்டு மொத்த வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பிடம் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயம்பேடு பகுதியில் ஒரே வளாகத்தில் 500 மொத்த மளிகை கடைகள் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டு, வியாபாரிகள் ஒவ்வொருவரிடம் 10 சதவீதம் முன்பணம் பெறப்பட்டது.இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது. இதே பகுதியில் மெட்ரோ ரயில் பணி தொடங்கிய நிலையில்,


இத்திட்டத்தை செயல்படுத்துவதில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அங்காடி குழு (எம்.எம்.சி.,) கட்டடத்தின் அருகாமையில், 14 ஏக்கர் பரப்பளவில் கட்டடப் பணி துவங்கவுள்ளது.குறிப்பாக 18 முதல் 20 பிளாக்குகளாக கட்டப்படும் இந்த மார்க்கெட்டில், ஒவ்வொரு பிளாக்கிற்கும் 22 கடைகள் என கட்டப்படும். சில பிளாக்களில் பெரியளவிலான 12 கடைகள் எனவும் கடைகள் கட்டப்படும். கடைகளை பொறுத்தவரை தரை தளமாகவும், ஒரு சில கடைகள் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்டதாகவும் அமையவுள்ளது.


பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு பிளாக்கிற்கும் இடையே 10 மீட்டர் இடைவெளி கொண்ட சாலைகள் அமைக்கப்படும். மொத்தத்தில் ஒரே வளாகத்தில் 500 மொத்த வியாபார மளிகைக் கடைகள் அமைப்பதற்கான கட்டடப் பணி, வரும் டிசம்பர் இறுதியில் துவங்கவுள்ளது.கட்டடப் பணியை ஒன்றரை வருடத்திற்கும் முடிக்கும் திட்டம் உள்ளதாகவும், பின் மார்க்கெட்டின் நிர்வாகத்தினை சென்னை மாநகராட்சி துறையினரிடம் ஒப்படைப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: