கனமழை பெய்வதால் பள்ளிகள் செயல்படக்கூடாது

தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகள் கட்டாயமாக செயல்படக்கூடாது, என கலெக்டர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 25ம் தேதி பலத்த மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்யாத போதிலும், பெரும்பாலான பள்ளிகள் மதியத்துக்கு மேல் விடுமுறை விடுக்கப்பட்டது. நேற்று கடும் மழை பெய்யும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுக்கப்படுவதாக கலெக்டர் சண்முகம் அறிவித்தார். இருப்பினும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், சில அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு வகுப்பு நேற்று நடந்தது. நேற்று கலெக்டர் சண்முகம் கூறுகையில், ""கனமழை தொடர்வதால் கட்டாயமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27, 28ம் தேதி விடுமுறை விடுக்கப்படுகிறது. அன்றைய தேதியில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் எந்த கல்வி நிறுவனமும் வகுப்புகள் நடத்தக்கூடாது,'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின

வடமேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும், இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

வயல்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பிற்பகல் 2 மணி வரை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.


இந்த மழை காரணமாக திருவாரூரில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. திருவாரூர் காட்டுக்காரத்தெரு, மன்னார்குடி அசேஷம் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.


நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. நாகை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.


மேலும் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47) என்ற விவசாயி குளிர் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். கடமடை பாசன ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தலைஞாயிறு, கீழையூர் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கி விட்டன. பயிர் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி,


’’இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’’என்று தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீசினால், ஆயுள் தண்டனை!

ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

முகத்தில் திராவகம் (`ஆசிட்') வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற இளம்பெண், இந்த குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். லட்சுமி சிறுமியாக இருந்த போது நடந்த இந்த தாக்குதலில் அவருடைய முகம் சிதைந்ததுடன், கண் பார்வையும் பறி போனது.


பெரும்பாலும் இளம்பெண்கள்தான் இந்த குற்றத்தினால் பாதிக்கப்படுவதால், அந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் சட்ட விதிகளில் வகை செய்ய வேண்டும் என்றும் லட்சுமி தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, `ஆசிட் 'வீச்சு குற்றத்துக்கு தண்டனையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு தரப்பில் மெத்தனமாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது.


இது கொலை குற்றத்தை விட மோசமானது என்பதால், இந்திய தண்டனை சட்டம் 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கொண்டு வரும் படியும் மத்திய அரசை வற்புறுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவதற்காக, நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.


மத்திய உள் துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையிலான அந்த குழு, `ஆசிட்' வீசும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல், அதிக பட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்று, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.


அத்துடன் குற்றவாளிகளுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவி தொகையாக வழங்கலாம் என்றும் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக, சுப்ரீம் கோர்ட்டு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் தொடர் மழை

தமிழகத்தின் தென் மாவட்டஙகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிப்பதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் , திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக மழை விட்டு, விட்டும், சில பகுதிகளில் தொடர்ந்தும் பெய்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இரவில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லையென்றாலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாடக்குளம் கண்மாய் மாறுகால் பாய்கிறது. வைகை அணை 71 அடி நிரம்பி விட்டதால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மதுரையில் ஆரப்பாளையம் , யானைக்கல் உள்ளிட்ட தரைப்பாலங்கள் மூழ்கின. மதுரை வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை பார்க்க பலர் குடும்பத்தினருடன் வந்தனர்.வைகை அணையின் நீர் மட்டம் : தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது. அணைப்பகுதியில் நல்ல மழை காரணமாக நீர்வரத்து கணிசமாக உள்ளது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 69.59 ( மொத்தம் அணையின் கொள்ளளவு 71 அடி ) இந்த அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 046 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 2 ஆயிரத்து 46 கன அடி நீர் வெளியேறுகிறது.


அணையின் நீர் இருப்பு 50 ஆயிரத்து 721 மில்லியன் கன அடியாகும். பெரியார் அணை நீர் மட்டம் 127 அடியாக உயர்ந்திருக்கிறது. ( மொத்தம் கொள்ளளவு 136 அடி) . இந்த அணைக்கு 2 ஆயிரத்து 555 கன அடி நீர் வரத்து உள்ளது. நீர் இருப்பு மொத்தம் 4 ஆயிரத்து 50 மில்லியன் கன அடி ஆகும். பெரியாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது.


ராமநாதபுரத்தில் பெரிகண்மாய் நிரம்புகிறது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மப்பும் , மந்தாரமுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய பெரிகண்மாய் 60 சதம் நிரம்பியிருக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள காருக்குடி கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நிலை இதே அளவு இருக்குமானால் இந்த கண்மாய் நிரம்பி விடும் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பெரிய கண்மாய் மண்டபத்தில் அதிப்பட்சமாக 207 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. திருவாடானை உள்பட 15 வீடுகள் இடிந்துள்ளன. நீரை வெளியேற்றும் பணியில் வருவாய், நகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சாரலுடன் கூடிய மழை பெய்தது.இளையான்இடி அருகே உள்ள தாயமங்கலம் கண்மாய் நிரம்பியது. இதன் காரணமாக அருகில் உள்ள அகதி முகாமிற்குள் நீர் புகுந்தது. மறவமங்கலம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறை: மழை காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணை நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அம்பாசமுத்திரம் மணியாச்சி பகுதியில் அதிகப்பட்சமாக 7 செ.மீட்டர் மழை பதிவாகியது.

போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்

போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குகள் வரும் சனிக்கிழமை எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை மூலமாக ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில், தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் ஒரே சங்கத்துடன் மட்டும் பேச்சு நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த நிலையில், இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், 1.25 லட்சம் தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கென மாநிலம் முழுவதும் 270 மையங்கள் அமைக்கப்படுகிறது. காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.


தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஹாதியும், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையாளர் மதன்மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை குரோம்பேட்டையில் பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டு வரும் சனிக்கிழமை எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


இந்தத் தேர்தலில் 13 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. திமுகவின் ஆதரவு பெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அதிமுக ஆதரவு பெற்ற அண்ணா தொழிற்சங்கம், இடதுசாரிகளின் சி.ஐ.டி.யு., ஆகிய மூன்று தொழிற்சங்கங்களுக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சென்டிரல்-நெல்லை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது

சென்னை: பயணிகளின் வசதிக்காகவும், கூட்டநெரிசலை குறைப்பதற்காகவும் வரும் 17-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு ரயில் (வ.எண். 06013) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். இதேபோன்று வரும் 18-ம் தேதி முதல் அடுத்த மாதம் 16-ம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (06014) இயக்கப்படுகிறது. இச்சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இது சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம் , சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

பலஸ்தீன் சிறுவர்கள்மீது தொடரும் இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனம்


ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தில் உள்ள சில்வான் பிரதேசக் குடியிருப்புப் பகுதியைத் திடீரெனச் சுற்றிவளைத்துக் கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படை அங்குள்ள பலஸ்தீன் சிறுவர்கள் பலரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

சில்வானின் பத்ன் அல் ஹவா குடியிருப்பில் உள்ள பலஸ்தீன் வீடுகளுக்குள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அனுசரணையுடன் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படை சிறுவர்களின் பெற்றோரை அடித்து இம்சித்ததோடு, அவர்களின் கண்ணெதிரிலேயே குழந்தைகளின் கைகளையும் கண்களையும் கட்டி இராணுவ ஜீப்களில் மஸ்கொபெஹ் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படையினரால் சட்டவிரோதமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ள இச் சிறுவர்கள் அனைவரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை இந்தப் பிரதேசத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்து பலஸ்தீன் பொதுமக்களையும் சிறுவர்களையும் கைதுசெய்து தடுப்பு முகாம்களில் அடைத்து வருவது சர்வசாதாரணமான நிகழ்வுதான் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 33 பலஸ்தீன் சிறுவர்கள் இப்பிரதேசத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என அண்மைய அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது.

கோவை என்கவுண்டர் எதிரொலி! சென்னை சிறுவனை கடத்தியவர்கள் கதறல்!

சென்னை: கோவை என்கவுண்டரில் மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டதும் சென்னையில் சிறுவன் கீர்த்திவாசனை கடத்திய வழக்கில் பிடிபட்ட பிரபு, விஜய் இருவரும் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கோவையில் சிறுவர்களை கடத்தி வன்புணர்ந்து கொலைசெய்த மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இவர்கள் இரண்டு பேரிடமும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கோவை மோகன் கதி தங்களுக்கு வேண்டாம் என்று காவலர்களிடம் இருவரும் கதறி அழுதனர். இதனையடுத்து காவல்துறையினர் உறுதியளித்ததால் அழுவதை விட்டுவிட்டு முழு விசாரணைக்கு ஒத்துழைத்தனர்.

கடத்தலில் கிடைத்த ஒரு கோடி ரூபாய் பணத்துடன் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். விஜய், பிரபு இருவரையும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் இருவரையும் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தரத்தில் தாழ்ந்துவரும் தமிழ்ப்படங்கள் : இயக்குநர் மிஷ்கின்

தமிழ்ப்படங்கள் தரத்தில் தாழ்வுற்றிருப்பதாக இயக்குநர் மிஷ்கின் வருத்தப்பட்டார்.

செவன்த் சேனல் நிறுவனம் தொடர்ந்து 7-வது ஆண்டாக நடத்தும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஜெர்மன், பெல்ஜியம், போலந்து உள்ளிட்ட நாடுகளின் சிறந்த படங்கள் இதில் திரையிடப்படுகின்றன.


இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின்,

"தமிழில் தரம்தாழ்ந்த படங்களாகவே வரிசையாக இப்போது வந்துகொண்டிருக்கின்றன. இந்தத்தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது தமிழ் திரைப்படத்தின் தரம் கீழ் நோக்கி போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. . நான் இயக்கிய "அஞ்சாதே', "சித்திரம் பேசுதடி' ஆகிய படங்கள் தரம் தாழ்ந்த படங்கள்தான். என்ன செய்வது, வியாபாரத்துக்காகவும், ரசிகர்களைக் கவருவதற்காகவும் நல்ல சினிமாக்களில் சில விஷயங்களைத் திணிக்க வேண்டியிருக்கிறது.

சில விஷயங்களுக்காக இரண்டு படங்களிலும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்ட குத்துப்பாட்டைத் திணிக்கப் போய் என்னை 'குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்ட்' என்று சொல்லிவிட்டார்கள்" என்ற மிஷ்கின் "நல்ல படம் எது என்பதற்கு நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது" என்றும் கூறினார்.

விழாவில் பத்தி எழுத்தாளர் சாருநிவேதிதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர்.