பலஸ்தீன் சிறுவர்கள்மீது தொடரும் இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனம்


ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தில் உள்ள சில்வான் பிரதேசக் குடியிருப்புப் பகுதியைத் திடீரெனச் சுற்றிவளைத்துக் கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படை அங்குள்ள பலஸ்தீன் சிறுவர்கள் பலரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

சில்வானின் பத்ன் அல் ஹவா குடியிருப்பில் உள்ள பலஸ்தீன் வீடுகளுக்குள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அனுசரணையுடன் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படை சிறுவர்களின் பெற்றோரை அடித்து இம்சித்ததோடு, அவர்களின் கண்ணெதிரிலேயே குழந்தைகளின் கைகளையும் கண்களையும் கட்டி இராணுவ ஜீப்களில் மஸ்கொபெஹ் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் படையினரால் சட்டவிரோதமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ள இச் சிறுவர்கள் அனைவரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை இந்தப் பிரதேசத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்து பலஸ்தீன் பொதுமக்களையும் சிறுவர்களையும் கைதுசெய்து தடுப்பு முகாம்களில் அடைத்து வருவது சர்வசாதாரணமான நிகழ்வுதான் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 33 பலஸ்தீன் சிறுவர்கள் இப்பிரதேசத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என அண்மைய அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது.

0 comments: