போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை மூலமாக ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில், தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் ஒரே சங்கத்துடன் மட்டும் பேச்சு நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், 1.25 லட்சம் தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கென மாநிலம் முழுவதும் 270 மையங்கள் அமைக்கப்படுகிறது. காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஹாதியும், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையாளர் மதன்மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை குரோம்பேட்டையில் பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டு வரும் சனிக்கிழமை எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலில் 13 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. திமுகவின் ஆதரவு பெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அதிமுக ஆதரவு பெற்ற அண்ணா தொழிற்சங்கம், இடதுசாரிகளின் சி.ஐ.டி.யு., ஆகிய மூன்று தொழிற்சங்கங்களுக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment