ஆசிட் வீசினால், ஆயுள் தண்டனை!

ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

முகத்தில் திராவகம் (`ஆசிட்') வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற இளம்பெண், இந்த குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். லட்சுமி சிறுமியாக இருந்த போது நடந்த இந்த தாக்குதலில் அவருடைய முகம் சிதைந்ததுடன், கண் பார்வையும் பறி போனது.


பெரும்பாலும் இளம்பெண்கள்தான் இந்த குற்றத்தினால் பாதிக்கப்படுவதால், அந்த பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் சட்ட விதிகளில் வகை செய்ய வேண்டும் என்றும் லட்சுமி தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, `ஆசிட் 'வீச்சு குற்றத்துக்கு தண்டனையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு தரப்பில் மெத்தனமாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது.


இது கொலை குற்றத்தை விட மோசமானது என்பதால், இந்திய தண்டனை சட்டம் 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கொண்டு வரும் படியும் மத்திய அரசை வற்புறுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவதற்காக, நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.


மத்திய உள் துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையிலான அந்த குழு, `ஆசிட்' வீசும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை முதல், அதிக பட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்று, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.


அத்துடன் குற்றவாளிகளுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து, அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவி தொகையாக வழங்கலாம் என்றும் சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக, சுப்ரீம் கோர்ட்டு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

0 comments: