10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின

வடமேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும், இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

வயல்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பிற்பகல் 2 மணி வரை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.


இந்த மழை காரணமாக திருவாரூரில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. திருவாரூர் காட்டுக்காரத்தெரு, மன்னார்குடி அசேஷம் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.


நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. நாகை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.


மேலும் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47) என்ற விவசாயி குளிர் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். கடமடை பாசன ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தலைஞாயிறு, கீழையூர் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கி விட்டன. பயிர் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.

0 comments: