கடந்த ஒரு வார காலமாக மழை விட்டு, விட்டும், சில பகுதிகளில் தொடர்ந்தும் பெய்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இரவில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லையென்றாலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாடக்குளம் கண்மாய் மாறுகால் பாய்கிறது. வைகை அணை 71 அடி நிரம்பி விட்டதால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மதுரையில் ஆரப்பாளையம் , யானைக்கல் உள்ளிட்ட தரைப்பாலங்கள் மூழ்கின. மதுரை வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை பார்க்க பலர் குடும்பத்தினருடன் வந்தனர்.
வைகை அணையின் நீர் மட்டம் : தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது. அணைப்பகுதியில் நல்ல மழை காரணமாக நீர்வரத்து கணிசமாக உள்ளது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 69.59 ( மொத்தம் அணையின் கொள்ளளவு 71 அடி ) இந்த அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 046 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 2 ஆயிரத்து 46 கன அடி நீர் வெளியேறுகிறது.
அணையின் நீர் இருப்பு 50 ஆயிரத்து 721 மில்லியன் கன அடியாகும். பெரியார் அணை நீர் மட்டம் 127 அடியாக உயர்ந்திருக்கிறது. ( மொத்தம் கொள்ளளவு 136 அடி) . இந்த அணைக்கு 2 ஆயிரத்து 555 கன அடி நீர் வரத்து உள்ளது. நீர் இருப்பு மொத்தம் 4 ஆயிரத்து 50 மில்லியன் கன அடி ஆகும். பெரியாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ராமநாதபுரத்தில் பெரிகண்மாய் நிரம்புகிறது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மப்பும் , மந்தாரமுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய பெரிகண்மாய் 60 சதம் நிரம்பியிருக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள காருக்குடி கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நிலை இதே அளவு இருக்குமானால் இந்த கண்மாய் நிரம்பி விடும் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பெரிய கண்மாய் மண்டபத்தில் அதிப்பட்சமாக 207 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. திருவாடானை உள்பட 15 வீடுகள் இடிந்துள்ளன. நீரை வெளியேற்றும் பணியில் வருவாய், நகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சாரலுடன் கூடிய மழை பெய்தது.இளையான்இடி அருகே உள்ள தாயமங்கலம் கண்மாய் நிரம்பியது. இதன் காரணமாக அருகில் உள்ள அகதி முகாமிற்குள் நீர் புகுந்தது. மறவமங்கலம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை: மழை காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணை நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அம்பாசமுத்திரம் மணியாச்சி பகுதியில் அதிகப்பட்சமாக 7 செ.மீட்டர் மழை பதிவாகியது.
0 comments:
Post a Comment