10 ரூபாய் நாணயங்களை பத்திரப்படுத்தும் பொதுமக்கள்

ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கில் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், சந்தை புழக்கத்தில் இதுவரை ஒரு நாணயம் கூட வரவில்லை.

ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. இவை வழக்கமான நாணயங்கள் போல் இல்லாமல் இரு வகையான உலோகங்களில் செய்யப்பட்டிருந்தது.

வெளிவட்டம் செம்பு உலோகத்திலும், உள்வட்டம் நடுவில் தேனிரும்பிலும் செய்யப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒன்றில் சூரியனும், இன்னொன்றில் குறுக்கு கோடுகள் என இரண்டு விதமான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் ரூ.50, 100 ரூபாய் செலுத்தி, 10 ரூபாய் நாணயங்களை பெறலாம். அதேபோல் சிறப்பு மையங்கள் மூலம் ரூ.500, ரூ.1000 மதிப்புக்கும் நாணயங்களை வாங்கலாம். இப்படி சென்னை ரிசர்வ் வங்கி மூலம் இதுவரை ரூ.100 கோடி மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை சந்தையில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லை.

இந்த 10 ரூபாய் நாணயங்கள் வித்தியாசமாக, மக்களை கவரும் விதத்தில் பழங்கால பொற்காசுகளை போன்று இருப்பதால் வாங்கும் பொதுமக்கள், கடைக்காரர்கள் பத்திரப்படுத்தி விடுகிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான்.
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் வரை ரூ.3300 கோடி மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

0 comments: