ஏழை மாணவிகள் 9ம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.3,000 டெபாசிட்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பில் சேரும் ஏழை மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்கத் தொகையாக தலா ரூ.3,000 வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்காக தமிழகத்திற்கு ரூ.36 கோடியே 38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கான உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப் படுத்தியது. இத்திட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவிகளின் பெயரில் ரூ.3,000 வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.


மாணவி 18 வயது நிறைவு செய்யும் போது இப்பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அல்லது உயர்கல்வியில் சேரும் சமயத்தில் பயன்படு்த்திக் கொள்ளலாம்.


ஒன்பதாம் வகுப்பில் சேரும்போது 16 வயதுக்கு மிகாத அனைத்து ஆதிதிராவிட, பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.


அல்லது, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயாக்களில் எட்டாவது தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் அல்லது உள்ளாட்சி பள்ளிகளில் ஒன்பதாவது சேர்ந்துள்ள பெண்கள் திட்டத்தில் பயனடையலாம்.


தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் இதர பள்ளிகளில் படிக்கும் பெண்கள், இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இத்திட்டத்துக்காக தமிழகத்திற்கு ரூ.36 கோடியே 38 லட்சம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இத்தொகை வங்கியில் வரவு வைக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: