ஒபாமா கடிதம்....

சிங்கள அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக இலங்கை பத்திரிக்கையாளர் திசநாயகம் ராஜபக்சே உத்தரவினால் கைது செய்யப்பட்டார்.

பலவேறு தரப்பினரும் அவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கொஞ்சம் கூட ராஜபக்சே அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காததால் திசநாயகம் இன்றும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை விடுதலை செய்யக்கோரி இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து இலங்கை செய்தியாளர்களிடம் ராஜபக்சே, ’’சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திசநாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடிதம் அனுப்பியுள்ளார். திசநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்று அந்த கடிதத்தில் ஒபாமா கேள்வியெழுப்பியுள்ள்ளார்’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்சே, ‘’ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன்.

முன்பு ஒருமுறை என்மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நான் உரிய முறையில் வழக்கறிஞர் மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியளித்தவர்கள் பொய் சாட்சி சொன்னமைக்காக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திசநாயகமும் தனது தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். இதனை விடுத்து திசநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.
திசநாயகத்தை விடுவிக்குமாறு ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நானாக இதற்கு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை அவமதித்தாக அமைந்துவிடும்’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments: