சேலம் இரும்பாலை கிளை ஸ்டேட் வங்கி மேலாளராக பணியாற்றியவர் ராமபாண்டியன் (50). இவரது மனைவி சண்முகவள்ளி (45). இவர் கல்லூரி பேராசிரியையாக இருந்தார்.
இவர்களது மகன் ஜாய்மதன் (18) பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.வங்கி அதிகாரி ராமபாண்டியன் தனது குடும்பத்துடன் காரில் திருநெல்வேலி சென்றார். பின்னர் அங்கிருந்து சேலம் புறப்பட்டார். காரை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேலப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் ஓட்டி வந்தார்.
இவர்கள் வந்த கார் நேற்றிரவு 7 மணி அளவில் திண்டுக்கல் நோக்கி வந்த போது கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவில் விபத்தில் சிக்கியது.நான்கு வழிச்சாலை பணிக்கு பயன்படுத்தப்படும் லாரி, ஜல்லிப்பட்டி கிராமத்திற்குள் சென்றுவிட்டு பிரதான சாலையில் திரும்பிக்கொண்டிருந்தது. இந்த சமயத்தில் வேகமாக வந்த கார், லாரி மீது மோதியது.இதில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து லாரியும், காரும் தீப்பிடித்து எரிந்தது.
லாரி ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் கீழே குதித்து உயிர் தப்பிவிட்டனர்.காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் அந்த பகுதி பொதுமக்கள் மீட்க முயன்றனர். ஆனால் கார் ஓட்டுநர் ரமேஷ் என்பவர் மட்டும் மீட்கப்பட்டார். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் லாரியும், காரும் தீயில் எரிந்து சாம்பலானது.இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த வங்கி மேலாளர் ராமபாண்டியன், அவரது மனைவி சண்முகவள்ளி, மகன் ஜாய்மதன் ஆகியோர் உடல் கருகி கரிக்கட்டைகளாக காருக்குள்ளேயே இறந்து கிடந்தனர். அவர்கள் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் எரிந்து காணப்பட்டது.
0 comments:
Post a Comment