இந்தியாவில் ஆண்டு‌க்கு 10 லட்சம் குழந்தைகள் இற‌ப்பு

''இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன'' என்ற அதிர்ச்சி தகவலை யுனிசெப் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான 'யுனிசெப்' அமைப்பு இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, மெக்சிகோ, சுவீடன் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள குழந்தைகளின் நிலை பற்றி ஆய்வு செய்து ஆய்வறிக்கை தயாரித்துள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தின் 20ஆம் ஆண்டு விழாவையொட்டி சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் யுனிசெப் தமிழ்நாடு, கேரளா கள அலுவலக தலைமை அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டார்.முதல் பிரதியை தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி பெற்றுக்கொண்டார்.

இந்த ஆய்வறிக்கையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாழும் குழந்தைகளின் நிலைமை, அவர்களின் நல்வாழ்வுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ந்து வந்தாலும் குழந்தைகள் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். குழந்தை உரிமைகள் மீறல் சம்பவங்கள் இதர நாடுகளை விட அதிகளவில் இங்கு நிகழ்கின்றன.

ஆண்டுதோறும் 10 லட்சம் பச்சிளம் குழந்தைகள் (பிறந்த ஒரு மாதத்திற்குள்) உயிரிழக்கின்றன.29 நாட்கள் மற்றும் 5 வயதுக்குள் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் 10 லட்சம் ஆகும். 5 வயதுக்கு உட்பட்ட 5.5 கோடி குழந்தைகள் எடைகுறைவாக உள்ளன.

2 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடக்கப்பள்ளிக்குக்கூட செல்வதில்லை.சுமார் 13 கோடி குழந்தைகளுக்கு நல்ல சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை.

குழந்தை இறப்பை தடுப்பதற்கு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலன் அளித்து வருகின்றன.மேற்கண்ட விவரங்கள் யுனிசெப் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

0 comments: