கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஜெட்டாவில் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 77 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வியாழக்கிழமை காலை முதல் ஜெட்டாவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாகியுள்ளன. பல்வேறு பகுதிகள் கடல் போல வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும் ஜெட்டாவுக்கு வரும் சாலைகள் அனைத்திலும் வெள்ளக் காடாக காணப்படுவதால் ஆயிரக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் ஆங்காங்கு தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜெட்டாவில் ஒரு வருடத்தில் மொத்தமே 2.76 இன்ச் மழைதான் பெய்யும். ஆனால் அந்த அளவு மழை ஒரே நாளில் பெய்து தீர்த்து விட்டது. இதனால்தான் பெரும் வெள்ளக்காடாகியுள்ளது ஜெட்டா.
பெரும் மழைக்கு ஜெட்டாவில் 73 பேரும், மெக்காவில் 4 பேரும் இறந்துள்ளனர். 900 பேர் மழை, வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
பெரும் மழை, வெள்ளம் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஜெட்டா நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
நெடுஞ்சாலைகளிலும் ஜெட்டா நகர சாலைகளிலும் வெள்ளம் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் சேதமடைந்துள்ளன. பாலங்கள், கட்டங்களும் சேதமடைந்துள்ளன.
புனித ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கான மக்கள் ஜெட்டாவில் குவிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஹரமெயின் நெடுஞ்சாலையில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக பாலம் சேதமடைந்துள்ளது. பாதி பாலம் உடைந்து விட்டது. இதையடுத்து இந்தப் பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ஜெட்டாவுக்கு கிழக்கில் உள்ள அல் ரகமா, அல் அஜவித், அல் சமீர், அல் தெளபீக் ஆகியவையும் மழை வெள்ளத்தால் ஜெட்டாவிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
மெக்கா, மெதீனா, ஜெட்டா ஆகிய நகரங்கள் , மேற்கு மாகாண நகரங்கள் ஆகியவற்றில் சில மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.
ஜெட்டாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 120 மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற 130 தண்ணீர் லாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1000 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment