வெள்ளை மாளிகை விருந்தில் ரஹ்மான்
வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த சிறப்பு இரவு விருந்தில் இந்திய வாசமே தூக்கலாக இருந்தது. மேலும் அனைவரும் வியக்கும் வகையில் மன்மோகன் சிங்கை இந்தியில் வரவேற்று அசத்தினார் ஒபாமா. ஒபாமாக அதிபரான பின்னர் முதல் முறையாக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். நேற்று ஒபாமாவை அவர் சந்தித்தார். அப்போது பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் தெற்குப் புல்வெளிப் பகுதியில், பிரமாண்ட விருந்தளித்தார் ஒபாமா. பிரதமர் மன்மோகன் சிங் விருந்துக்கு வந்தபோது ஆப்கா ஸ்வாகத் ஹை என்று இந்தியில் கூறி அசத்தினார் ஒபாமா. பிரதமருடன் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் இந்திய வாசம் தூக்கலாக காணப்பட்டது. சாப்பாட்டில் மட்டுமல்லாமல் வந்திருந்த புள்ளிகளும் பெரும்பாலும் இந்தியப் பிரபலங்களாக இருந்தனர். விருந்தில் இடம் பெற்ற காய்கறிகளில் பல அதிபரின் மனைவி மிஷல் ஒபாமாவின் நேரடி மேற்பார்வையில் பராமரிக்கப்பட்டு வரும் வெள்ளை மாளிகை தோட்டத்தில் வளர்ந்தவையாம். விருந்தின் முதல் சுற்றில் உருளைக்கிழங்கு மற்றும் எக்பிளான்ட் (கத்தரிக்காய்) சாலட், ஃபிரஷ் சீஸ் உடன் பருப்பு சூப் ஆகியவை பரிமாறப்பட்டன. அடுத்து, கிரீன் கறி ப்ரான், வறுத்த உருளைக்கிழங்கு, தக்காளி சட்னி, தேங்காயில் ஊறவைத்த பாசுமதி என களை கட்டியது. உணவு விருந்துக்கு பிறகு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை விருந்து அளிக்கப்பட்டது. இதனால் வயிறோடு, இதயமும் நிறைந்தது. ரஹ்மானின் இசையைத் தொடர்ந்து, கிராம்மி விருது வென்றவர்களான ஜெனிஃபர் ஹட்சனின் சொக்க வைக்கும் பாடல்கள் இடம் பெற்றன. கர்ட் எல்லிங்கின் ஜாஸ் இசையும் நிறைவு சேர்த்தது. விருந்தினர்கள் வரிசையில், இந்தியா வின் பவர்ஃபுல் முகங்களோடு, அமெரிக்கா வாழ் இந்தியர்களான பெப்சி தலைமை செயலதிகாரி இந்திரா நூயி, ஆன்மிக ஆலோசகர் தீபிகா சோப்ரா, பிரபல ஹாலிவுட் இயக்குனரும் தமிழருமான (சிக்ஸ்த் சென்ஸ், வில்லேஜ், அன்பிரக்கபிள், சைன்ஸ் உள்ளிட்ட அட்டகாச படங்களை இயக்கியவர்) மனோஜ் நைட் ஷியாமளன் மற்றும் சர்வதேச மீடியா பெரும் புள்ளிகளும் விருந்தி்ல் பங்கேற்றனர். ஹாலிவுட் ஜாம்பாவான்களான ஸ்டீவன் ஸ்பீல்பர்க், டேவிட் ஜெஃபன், ஜெஃப்ரி கெட்சன்பர்க் மற்றும் ஆல்ஃப்ரே உடார்ட், பிளெய்ர் அண்டர்வுட் ஆகியோரும் வந்திருந்தனர். ரஹ்மான் நிகழ்ச்சியை தொடங்கும் முன்பு அவரை மிஷல் அறிமுகப்படுத்தினார். அப்போது மிஷல் கூறுகையில், இவர் ஆஸ்கர் விருது வென்றவர். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்தவர். நீங்கள் எத்தனை பேர் அந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகவும் அற்புதமான படம் என்றார் மிஷல்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment