தமிழகத்தில் இன்று 'பந்த்' போராட்டத்தை சமாளிக்கஒரு லட்சம் போலீஸ்

Front page news and headlines today

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் அறிவித்த நாடு தழுவிய ஒரு நாள், 'பந்த்' இன்று நடக்கிறது. தமிழக போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 'பந்த்'தை வெற்றி பெற வைக்க மும்முரமாகக் களமிறங்கியுள்ளன. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளையும், ஒரு லட்சம் போலீசாருடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என அரசு அறிவித்துள்ளது.


பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது முறையாக காங்., கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல் ஏறி வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் ஏறி வருவதாகவும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்பப் பெறப்படவில்லை.இந்நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.


தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் நடக்கும் வேலை நிறுத்தத்தில், இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் - ம.தி.மு.க., மற்றும் ஆதரவு தொழிற் சங்கங்கள் முழு அளவில் பங்கேற்கின்றன. தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தவிர, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள், 'பந்த்'துக்கு ஆதரவு இல்லையென தெரிவித்துள்ளன.


பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோரியும் நடக்கும் போராட்டம் என்பதால், பொது மக்கள் ஆதரவு தர வேண்டுமென, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் முழு அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கும் என கூறப்படுகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று வழக்கம் போல் பணிக்கு வர உள்ளனர்.


அரசு அதிரடி ஏற்பாடு:


எதிர்க்கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து, குடிநீர், பால், தொலைபேசி, மருத்துவமனை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுத்துள்ளது.


பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் ஸ்ரீபதி,


''மக்களுக்கோ, பொதுச் சொத்துகளுக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்போர் மற்றும், 'பந்த்'தை சாதகமாகப் பயன்படுத்தி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்துள்ளார்.


சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன்,


''பஸ், ரயில் வழக்கம் போல் ஓடும். இதற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட சரக டி.ஐ.ஜி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு லட்சம் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை பெரியசாமி,


'பந்த்'தில் வர்த்தகர்கள் பங்கேற்க மாட்டார்கள்; கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்' என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.

0 comments: