கலை விருதுகள் பெற 20 கலைஞர்கள் தேர்வு

கலைமன்றம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 20 கலைஞர்கள் கலை விருதுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட கலைமன்றம் சார்பில் கலைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுக்கு 5 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2006–07ம் ஆண்டிற்கு இலங்கைச்சேரி ஹரிகிருஷ்ணன்சிங் சுர்ஜித் கலைஇளமணி விருதுக்கும், பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் அருள் கலைவளர்மணி விருதுக்கும், வயலின் கலைஞர் ஆண்டாங்கோவில் குருமூர்த்தி கலை சுடர்மணி விருதுக்கும்,

நையாண்டிமேள தவில் கலைஞர் தேவர்கண்டநல்லூர் கலியமூர்த்தி நன்மணி விருதுக்கும், மேடை நாடக கலைஞர் மன்னார்குடி ராஜகோபாலன் கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல் 2007–08ம் ஆண்டுக்கு பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் அபராஜிதா கலை இளமணி விருதுக்கும், குரலிசை மற்றும் வயலின் கலைஞர் மன்னார்குடி ஜெயந்தி மணிசங்கர் கலை வளர்மணி விருதுக்கும், சிலம்பாட்டம் மற்றும் கோலாட்ட கலைஞர் தப்பளாம்புலியூர் ஜெகன்நாதன் கலை சுடர்மணி விருதுக்கும், நாடக நடிகர் சேங்காலிபுரம் சிவாஜி ராகவன் கலை நன்மணி விருதுக்கும், நாடகக்கலைஞர் பருத்திக்கோட்டை ராமையா கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2008–09ம் ஆண்டிற்கு கிராமிய கலைஞர் தப்பளாம்புலியூர் குளுந்தாயி கலை இளமணி விருதுக்கும், மிருதங்க கலைஞர் அம்மையப்பன் முருகன் கலை வளர்மணி விருதுக்கும், பவளக்காளியாட்ட கலைஞர் புதுப்பத்தூர் பாலகிருஷ்ணன் கலை சுடர்மணி விருதுக்கும், தவில் கலைஞர் இடும்பாவனம் பாஸ்கரன் கலை நன்மணி விருதுக்கும், அருட்பா கலைஞர் அன்னியூர் சீனிவாசன் கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் 2009–10ம் ஆண்டிற்கு பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் சண்முகபிரியா கலை இளமணி விருதுக்கும், பரதநாட்டிய கலைஞர் குளிக்கரை யமுனா கலை வளர்மணி விருதுக்கும், மேடை நாடகக்கலைஞர் மன்னார்குடி சண்முகசுந்தரம் கலை சுடர்மணி விருதுக்கும், நாதஸ்வர கலைஞர் கோவிலூர் சோமநாதன் கலை நன்மணி விருதுக்கும், நாடகக்கலைஞர் வடுவூர் கலைபித்தன் கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 20 கலைஞர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய்க்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். இவர்களுக்கு நாளை (18ம் தேதி) திருவாரூர் பழைய ரயில் நிலையம் அருகில் உள்ள மரினா மஹாலில் அமைச்சர் மதிவாணன் விருதுகளை வழங்குகிறார்.

0 comments: