இன்று நடக்கும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது: தங்கபாலு

'எதிர்க்கட்சிகளால் நாளை (ஏப்.27) நடத்தப்படும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது, '' என தமிழக காங்., தலைவர் தங்கபாலு கோவையில் நிருபர்களிடம் கூறினார்.தமிழ்நாடு காங்., சேவாதள தொண்டர்களுக்கான மாநில பயிற்சி முகாம், போத்தனூரில் நேற்று துவங்கியது.


முகாமில் நிருபர்களிடம் தங்கபாலு கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை (இன்று) சில கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இரு அரசுகளின் செயல்பாடும் குறை கூற இயலாதவாறு உள்ளது. அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில், சம்பந்தமே இல்லாத சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு இந்த போராட்டத்தினை அறிவித்துள்ளனர். மக்கள் பிரச்னைக்காக சட்டசபையிலும், லோக்சபாவிலும் ஜனநாயக ரீதியாக விவாதிக்க தயாராக இல்லாதவர்கள் இந்த 'பந்த்'க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது மக்களுக்கு எதிரான ஒன்றாகும்.


பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற எந்த அமைப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை. தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பவில்லை. அவர் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை பயன்படுத்தி, சிலர் குறுக்கு வழியில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.கார்த்தி சிதம்பரம், மாநகர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளர் தங்கம் பழனிசாமி, அகில இந்திய அமைப்பாளர் மத்நாயக், கங்காதரராவ், டென்னிஸ் செல்வராஜ், செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: