பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்து மூழ்கிய இளைஞர் : தற்கொலை இடமாக மாறும் அவலம்

பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதியிலிருந்து கடலில் குதித்து மூழ்கிய இளைஞர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாம்பன் ரோடு பாலத்தின் மேல் நேற்று பிற்பகல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா வாகனங்களும் பாலத்தின் மேல் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை 3 மணியளவில் பாலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள, ரயில் பாலத்தின் கப்பல் செல்லும் போது திறக்கும் பகுதியை, சுற்றுலா பயணிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பாம்பன் ரோடு பாலத்தின் கைப்பிடி தடுப்பு சுவர் மீது 20 வயதுள்ள இளைஞர் ஒருவர் ஏறி நின்று, திடீரென்று கடலில் குதித்து விட்டார். சுற்றுலா பயணிகள் கடலுக்குள் குதித்தவரை காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர்.


கடலில் குதித்த இளைஞர் சில நிமிடங்களில் இரண்டு முறை மட்டும் கடல் நீருக்கு மேலே தலையை தூக்கி கைகளை வெளியே நீட்டியபின் கடலுக்குள் மூழ்கிவிட்டார். இளைஞர் குதித்த இடம் கப்பல் செல்லும் நடுப்பாலம் என்பதாலும், கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததாலும் இளைஞரின் உடல் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. பாம்பன் கடற்கரையில் நின்றிருந்த மீனவர்கள் சிலர் படகில் விரைந்து சென்று கடலில் குதித்தவரை தேடியும், அவரது உடல் அகப்படவில்லை. கடலோர காவல் படை போலீசாரும் இப்பகுதிக்கு வந்து தேடிப்பார்த்தும் உடல் கிடைக்கவில்லை.


'கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், கடலில் மூழ்கியவரின் உடல் வேறு எங்காவது கரையில் ஒதுங்குவதற்கு வாய்ப்புள்ளது' என்று, மீனவர்கள் தெரிவித்தனர்.
இதே பாலத்தில் இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ள போதும் கடலில் குதித்தவர்கள் நடுப்பாலத்தில் குதிக்காததால் அவர்களை எல்லாம் மீனவர்கள் சிறு காயங்களுடன் காப்பாற்றியுள்ளனர். ஆனால் நேற்று குதித்தவர் நீரோட்டம் மிகுந்த கடல் பகுதியில் குதித்ததால் நீரோட்டத்தில் சிக்கி கடலில் மூழ்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். பாம்பன் கடலில் கடலையும், தீவுகளையும் பார்த்து ரசிக்க சுற்றுலா பயனிகளுக்கு பயன்படும் பாம்பன் ரோடு பாலம் தற்போது கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள தகுந்த இடமாகவும் மாறிவருகிறது. இந்நிலையை மாற்ற இங்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும்.

0 comments: