ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவியுங்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,..............சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மிகவும் பழமையான மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான ராமர் சேது பாலத்தின் மீது கால்வாயின் 6வது பாதையை வெட்டும் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முறையீட்டு மனுக்களை 2007ம் ஆண்டில் தாக்கல் செய்தேன்.அந்த மனுக்களில் ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது இறுதி உத்தரவுகளை வெளியிடும் வரையில் அதனை தேசிய புராதான சின்னமாகக் கருதி எந்த நிலையில் இருக்கிறதோ அதை அப்படியே தொடர்ந்து பாதுகாக்க தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்கும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்துக்கும் உத்தரவிட வேண்டுமெனவும், பாலத்தில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாதிருக்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைக்கும், சேது சமுத்திரம் கழகத்துக்கும் உத்தரவிட வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.ராமர் பாலம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஆர்.கே.பச்சௌரி தலைமையிலான குழுவை மத்திய அரசு 2008ம் ஆண்டு அமைத்தது. அந்தக் குழு அறிக்கையின் சுருக்க விவரம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறைகளின் வல்லுநர் குழு ஆய்வு செய்து தனது கருத்துகளை கடிதத்தின் வாயிலாக கப்பல் போக்குவரத்துக்குத் துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிப்பது குறித்து கருத்துகளை வியாழக்கிழமையன்று தெரிவிக்குமாறு மத்திய அரசின் வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிப்பதில் எந்த தாமதமும் காட்டக் கூடாது. அது குறித்த தனது கருத்துகளை நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

0 comments: