செப்பேடு கண்காட்சி

""மக்களிடையே பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, செப்பேடு கண்காட்சி உதவும்,'' என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சென்னை எழும்பூர், அரசு அருங்காட்சியக அரங்கில், அரசர்கள் ஆட்சி செய்த கால அரசியல் மற்றும் வரலாற்றுச் செய்திகளின் பதிவுகளைத் தாங்கிய செப்பேடுகள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
பண்டைய காலத்து வரலாறுகளை நினைவு கூறும் செப்பேடுகளை, தொல்லியல் துறை சேகரித்து பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. நாணயங்கள் கண்காட்சியைத் தொடர்ந்து, செப்பேடுகள் பற்றிய கண்காட்சியை நடத்துவது சிறப்பு. சோழ, பாண்டிய, பல்லவர் உள்ளிட்ட அரசர்களின் வரலாற்றை விளக்கும் செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அரசர்களின் ஆட்சி முறை, கொடை, நிபந்தனைகள் பற்றி விளக்கும் வரலாற்று ஆவணமாக இந்த செப்பேடுகள் விளங்குகின்றன. பண்டைய வரலாறு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்த கண்காட்சி உதவும். இவ்வாறு அமைச்சர் பேசினார். தொல்லியியல் துறை ஓய்வு பெற்ற இயக்குனர் நாகசுவாமி, செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள எழுத்துகள் கூறும் வரலாற்றை பார்வையாளர்களுக்கு விளக்கினார். ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியதற்கான விவரம் அடங்கிய செப்பேடுகள், தஞ்சை தமிழ்ச் சங்கத்தில் இருந்து பெறப்பட்ட கரந்தை பகுதி செப்பேடுகள் மற்றும் நடனத்தில் காளியை வென்ற சிவன் பற்றிய வரலாறு கூறும் திருவாலங்காடு செப்பேடுகள் உள்ளிட்ட ஏராளமான புராதனமான செப்பேடுகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், இன்று முதல் நவம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்கலாம்.

0 comments: