தமிழனை தேடி கொண்டிருக்கிறேன்-ராமதாஸ்

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனத்தில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழப் பிரச்சனைக்காக இந்த இயக்கம் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒரு ஆண்டாக நாம் போராடிய போதும் தமிழர்கள் ஒத்த குரல் எழுப்பவில்லை. தமிழனையே தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக் கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். பெண்களை டி.வி. கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

''தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்?'' என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர். மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர்.

இலங்கை பிரச்சனைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் இல்லை.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி அல்ல.

இலங்கை பிரச்சனையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது எதிர்க் கட்சியாக இருந்த திமுக, இலங்கை பிரச்சனைக்காக எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன?.

பிகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால் பிகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால், தமிழர்களிடையே ஒற்றுமை கிடையாது.

விடுதலைப் போர் என்றைக்கும் முடிவுக்கு வராது. விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும் என்றார்.

0 comments: