சாதனைக்கு வயது தடையல்ல

ஸ்போர்ட்ஸ் ஷூ அணியாத வெற்று கால்களுடன், சீனியர் மாணவர்களுடன், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ஏழாம் வகுப்பு மாணவன், நான்காம் இடத்தில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு குழுமம் (பைக்கா) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அவிநாசி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி, அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. நிறைவு நாளான நேற்று தடகள போட்டிகள் நடந்தன. இதில், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. விதிகளின் படி, பள்ளியின் பெரிய மைதானத்தை 15 முறை (ஒரு சுற்றுக்கு 200 மீட்டர்) சுற்றி வர வேண்டும். ஏழாம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 15 பேர் பங்கேற்றனர். போட்டி துவங்கியதும், மிக வேகமாக ஓடிய நான்கு பேர் பாதி சுற்றிலேயே வெளியேறினர். மொத்த இலக்கான 3000 மீட்டரையும் நிறைவு செய்ய 14 நிமிடங்களாகும். ஓடத்துவங்கிய 10வது நிமிடத்தில், தொடர்ந்து ஐந்து பேர் வெளியேறி விட்டனர். இருப்பினும், வெற்று கால்களுடன், பள்ளி சீருடையிலேயே சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த கவுதம் என்ற சிறுவனை பார்த்து அனை வரும் ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர். 15வது நிமிடத்தில், முதலிடத்தை லோகேஷ் (பொங்குபாளையம்), இரண்டாமிடத்தை மணிகண்டன் (பழங்கரை), மூன்றாமிடத்தை விக்னேஷ் (பழங்கரை), ஜெயப்பிரகாஷ் (சேவூர்) ஆகியோரும் பிடித்தனர். அனைவராலும் ஊக்கப் படுத்தப்பட்ட சிறுவன் கவுதம், நான்காவதாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபித்த சிறுவன் கவுதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். கவுதம் கூறுகையில்,
""என்னுடன் படிக்கும் நண்பர்கள் தினேஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் 3000 மீட்டரில் கலந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினர். அவர் களுடன் நானும் ஓடினேன். ஆரம்பம் முதலே சீராக ஓடி, நான்காவது இடத்தை பெற்றேன். முதலிடம் பெற வேண்டுமென்ற லட்சியத்துடன் ஓடிய போதும், 15 ரவுண்ட் முடித்தது மகிழ்ச்சியளிக் கிறது,'' என்றார்.தலைமையாசிரியர் பிலோமின்ராஜ் கூறுகையில், ""மாணவன் கவுதமிடம் விளையாட்டு திறமை இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. சீனியர் மாணவர்களுக்கு இணையாக 3000 மீட்டர் ஓடியதோடு மட்டுமின்றி, நான்காவதாக வந்தான். சிறப்பு பரிசு வழங்கப் படும். கவுதமுக்கு விரைவில் "ஸ்போர்ட்ஸ் ஷூ' வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளேன்,'' என்றார். "பைக்கா' விளையாட்டு போட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ""நன்றாக பயிற்சி பெற்ற மாணவர்களாலேயே 3000 மீட்டர் ஓடுவது சிரமமான விஷயம். எவ்வித பயிற்சியும் இல்லாமல், கவுதம் ஓடியதோடு மட்டுமின்றி, நான்காவதாக வந்துள்ளான். முறையான பயிற்சியை வழங்கினால் இன்னும் பல சாதனைகளை செய்வான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து கவுதமுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்

0 comments: