அமெரிக்காவிலிருந்து தப்பி 2 ஆண்டாக தலைமறைவு- என்.ஆர்.ஐ. பெண் சென்னையில் கைது


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து தனது மகனுடன் தப்பி வந்து இந்தியாவில் தலைமறைவாக இருந்து வந்த என்.ஆர்.ஐ. பெண்ணை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் வைத்துப் பிடித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இப்பெண்ணை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்து பிடித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலிருந்து தனது மகனுடன் வேறு இடத்திற்கு மாற அந்தப் பெண்மணி முயன்றபோது சிபிஐ அதிகாரிகள் அவர்களைப் பிடித்தனர். உடனடியாக அவர்களை டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர்.

அதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி தருண் சாட்டர்ஜியின் இல்லத்திற்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தினர். அவர்களை 2 நாள் சிபிஐ காவலில் அனுமதித்த நீதிபதி, இருவரையும் செவ்வாய்க்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் விஜயஸ்ரீ வூரா. இவரது கணவர் ரவிச்சந்திரன். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வீடு உள்ளது.

2005ம் வருடம் செப்டம்பர் 8ம் தேதி திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி தனது மகனுடன் விஜயஸ்ரீ மாயமானார்.

இதுகுறித்து அமெரிக்க போலீஸில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். விசாரணையில், விஜயஸ்ரீ மகனுடன் இந்தியாவுக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில காவல்துறைக்கு அமெரிக்க காவல்துறை தகவல் தெரிவித்து தேடிக் கண்டுபிடிக்கும்படி கோரியது.

இந்த நிலையில் அமெரிக்க கோர்ட்டில் ரவிச்சந்திரன் - விஜயஸ்ரீ தம்பதிக்கு விவாகரத்து தீர்ப்பானது.

இதையடுத்து தனது மகன் ஆதித்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி ரவிச்சந்திரன், உச்சநீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயஸ்ரீயையும், ஆதித்யாவையும் கண்டு பிடித்து ஆஜர்படுத்தும்படி கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் இருவரையும் தேடத் தொடங்கினர். இதில் நேற்று இருவரும் சென்னையில் வைத்து சிக்கினர்.

விஜயஸ்ரீ வூரா சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

0 comments: