பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன! மதுரையில் பதற்றம்!

காளையார்கோவில் மருதுபாண்டியர்களின் குருபூஜையையொட்டி, மதுரையின் பல்வேறு பகுதியிலிருந்து காளையார்கோவிலில் உள்ள நினைவிடத்திற்கு ஏராளமானோர், வாகனங்களில் சென்றனர் , நேற்று மதியம் 12 மணிக்கு வாகன மேற்கூரை மீது அமர்ந்து போலீஸ் தடையை மீறி சிலர் ஆபத்தான வகையில் பயணித்தனர்.

சிவகங்கை ரோடு செக்-போஸ்ட்டில் அவர்களை போலீசார் தடுத்தனர். வாகனத்திற்குள் அமர்ந்து செல்லுமாறு கூற, ஆத்திரமடைந்த சிலர் போலீஸ் மீது கல்வீசினர். ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் செந்தில் இளந்திரையனுக்கு தொடையிலும், சிறப்பு காவல்படை போலீஸ்காரர் பாலமுருகபூபதிக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். பின், வாகனங்கள் காளையார்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.

மதுரையில் இருந்து வந்த சிலர் படமாத்தூர் அருகே சிவகங்கை - மதுரை பஸ் மீது கல் வீசினர். பஸ் கண்ணாடி சிதறி டிரைவர் முத்துக்குமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. அரசனூர் விலக்கு அருகே மற்றொரு பஸ் மீது கல் வீசியதில் டிரைவர் நாகராஜன் காயம் அடைந்தார். நாட்டரசன்கோட்டை, திருமாஞ்சோலை, பையூரிலும் பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. ஆறு பஸ்கள் சேதமடைந்தன. காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் முன் பணியில் இருந்த தேவகோட்டை டி.எஸ்.பி., முருகேஷ், அஞ்சலி செலுத்த வரிசையாக செல்லுமாறு கூறினார். காரில் வந்த சிலர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டதால் தடியடி நடத்தி கலைத்தனர்.

பிற்பகல் 2 மணிக்கு, சிவகங்கையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய அரசு பஸ்கள் அரை மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டன. பதட்டம் தணிந்த பின் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. மதுரைக்கு மேலூர் வழியாகவும், தொண்டிக்கு சோழபுரம், காளையார்மங்கலம், நடராஜபுரம் வழியாகவும் பஸ்கள் இயக்கப்பட்டன பஸ்கள் மாற்று வழியில் சென்றதால் இடையே உள்ள கிராமத்தினர் பல மணி நேரம் சிவகங்கையில் காத்திருந்தனர். டி.ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், எஸ்.பி., ராஜசேகரன் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்

0 comments: