கேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.
பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ" என்பதன் பொருள் என்னவெனில் "தொடர்ந்து உண்மையை நிராகரிக்கக் கூடியவர்கள்" என்பதாகும்.
இறைவன் இவ்வுலகைப் படைத்து மனிதர்களுக்கு சிந்திக்கக்கூடிய திறனை அளித்துள்ளான். அதனால் அவனது சுதந்திரமான சிந்தனையைப் பயன்படுத்தி சத்தியம் எது என தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றவேண்டும்.
"சிந்திக்க மாட்டீர்களா?" என்றும் இறைவன் மனிதகுலத்தை நோக்கிக் கேட்கிறான். இவ்வுலகவாழ்க்கை ஒரு தேர்வைப்போன்றது, தேர்வில் வெற்றிபெறுவதற்கான வழிகாட்டிகள் இறைத்தூதர்கள். இனி ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
ஒரு பள்ளிக்கூடத்தின் அனுபவமிக்க வகுப்பாசிரியர் ஒருவர், வகுப்பில் கவனம் செலுத்தாத, அதிகமாகத் தொந்தரவு செய்கிற, தனது வீட்டுப்பாடங்களைச் சரியாகச் செய்து வரத் தவறுகிற மாணவன் ஒருவனை அவன் இறுதித் தேர்வில் தேற மாட்டான் என்று கணிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாணவனும் இறுதித் தேர்வை எழுதி மேற்படித் தேர்வில் வெற்றியடையவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
மாணவன் இறுதித் தேர்வில் தோல்வியுற்றதற்கு யார் காரணம்? மாணவனா? ஆசிரியரா? மாணவன் இறுதித் தேர்வில் வெற்றி பெறமாட்டான் என்ற கணித்த காரணத்திற்காக ஆசிரியரை அறிவுடைய எவரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். மாறாகப் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத மாணவன்தான் தனது தோல்விக்குப் பொறுப்பாவான்.
அதேபோலத் தான் இறைவன் நேரான வழிகாட்டலுக்கு வேதத்தையும் அதன் செய்முறை விளக்கமாகத் தூதரையும் அருளியிருக்கிறான். தூதர் வாழ்ந்து காட்டியதோடு அச்சமூட்டி எச்சரிக்கையும் செய்து விட்டார். இனி சத்தியத்தைத் தேர்ந்தெடுப்பதும் விடுவதும் மனிதச் சிந்தையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒருமுறை தவறான வழிக்குச் சென்ற ஒரு மனிதன் அதன் உலகியல் சிற்றின்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடுவானேயானால், அவனுக்கு அச்சமூட்டி செய்யப்பட்ட எச்சரிக்கைகள் மரத்தும் மறந்தும் போய்விடலாம்.
இந்த நிலையில் தான் செல்லப் போவது நரகம் தானே பார்த்துக் கொள்ளலாம் என எள்ளல் நிலைக்கு அவன் வரும் போது, இறைவன் அவன் சிந்தையை முத்திரையிட்டு விட்டதாகக் கூறுகிறான்.
இறைவன் மிக அறிந்தவன்.
0 comments:
Post a Comment