சன் பொய்கள்… அடுக்குமா இது?

ஒன்றுமில்லாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவதில் சன் டிவிக்கு நிகர் அவர்களே. இவர்களது இந்த ஸ்டைலால், இவர்கள் சொல்லும் உண்மைச் செய்திகளைக்கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்க வேண்டியுள்ளது.


அரசியல் ரீதியாகவும் சரி, திரைத்துறைச் செய்திகளாக இருந்தாலும் சரி, செய்திகளை இந்த சேனல் தரும் விதம் மிகுந்த எரிச்சலையும், ‘இப்படி அநியாயத்துக்கு புளுகிறார்களே’ என்ற கோபத்தையும் விஷயமறிந்த ஒவ்வொருவர் மனதில் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை சென்சேஷனலாகத் தருவது, செய்தி சொல்வதில் ஒரு தனி கலைதான் என்றாலும்… வரைமுறையில்லாமல், தாங்கள் சொல்வதே உண்மை என பிடிவாதமாக தவறான தகவல்களைத் தருவது, எங்கே போய் நிறுத்துமோ என்ற அச்சம் பலர் மனதில் எழுந்துள்ளது நிஜம்.


சன்னும் ஜெயாவும் தேர்தல் முடிவு சொல்லும் விதம் இருக்கிறதே… யார் சிறந்த பொய்யர் என்ற போட்டியில் சர்வதேச விருது பெறும் அளவுக்கு தகுதிவாய்ந்த சமாச்சாரம் அது.


திமுக வெற்றி முகம் காட்டினால், லெட்டர் பேடு தலைவர்கள் முதல் பெருந்தலைகள் வரை சன் ஸ்டுடியோவில் வரிசை கட்டி நிற்பார்கள், கருத்து என்ற கருமத்தைச் சொல்ல. தோல்வி முகம் காட்டினாலோ, பாதியிலேயே நேரடி ஒளிபரப்பு ஜகா வாங்கும். அந்த இடத்தில் ஏதாவது ஒரு காமெடி ஷோ ஓடிக் கொண்டிருக்கும். இவர்கள் காமெடியை மக்கள் மறக்க இந்தக் காமெடி. இவர்களுக்கு சற்றும் சளைக்காத கூத்து ஜெயாவிலும் அரங்கேறும் என்றாலும், அதில் கூட அவர்களால் சன் அளவு பிரகாசிக்க முடியவில்லை!


காதலில் விழுந்தேன் என்ற குப்பைப் படத்தை வெற்றிப் படமாக்க சன் டிவி செய்த கண்றாவி உத்தியில் ஆரம்பித்தது சினிமாத் துறைக்கு சாபக்கேடு.


வேட்டைக்காரன் ரிலீஸ் வரை அதையே பிரதானமாகப் பிடித்துக் கொண்டு தொங்குகின்றனர். கதை இருக்கா… இல்லையா,வேறு ஏதாவது உருப்படியான சமாச்சாரம் உள்ளதா? என்றெல்லாம் கவலையேபடாமல், கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி, வரை முறை இல்லாத விளம்பரம் மூலம் அந்தப் படத்தை வெற்றிப்படம் என்று காட்டும் அடாவடிக்கு இன்று தமிழ் சினிமாவே அடிமைப்பட்டுக் கிடக்கிறது.


சன் நெட்வொர்க் சானல்கள் 10 நொடி விளம்பரத்துக்கு வெளி நபர்களிடம் வசூலிக்கும் கட்டணம் பல லட்சங்கள். இந்தத் தொகையை, அவர்கள் வாங்கி விற்கும் படத்துக்கு செய்யும் விளம்பர எண்ணிக்கைக்கேற்ப கணக்கிட்டுப் பாருங்கள்… சன் பிக்சர்ஸ் ரிலீஸ் படங்களின் உண்மையான வசூல் தெரிந்துவிடும்.


எந்தப் படமாக இருந்தாலும் சன் பிக்சர்ஸின் ‘வெற்றிப்படம்’ என்ற லேபிளையும் சேர்த்து ஒட்டித்தான் விளம்பரமே செய்கிறார்கள். அப்படியெனில் வெற்றி என்ற சொல்லுக்கோ, காசு கொடுத்து படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வைத்துள்ள கருத்துக்கோ மரியாதையே இல்லையா?


இதையெல்லாம் விட கொடுமை, விருப்பு வெறுப்பு இல்லாமல், மக்களுக்கு தகவல் சொல்ல வேண்டிய செய்திகளில் கூட, சன் பிக்சர்ஸ் படங்கள் பற்றிய வெற்றிச் செய்திகள்தான். அதுவும் தலைப்புச் செய்தியாக!


செய்தி ஒளிபரப்புக்கென வாங்கும் அனுமதியை எந்த அளவு துஷ்பிரயோகம் செய்கிறார்கள் பாருங்கள்…


ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை செய்தியாகச் சொல்கிறோம் என இவர்கள் வாதிடுவார்களேயானால், தமிழில் வெளியாகும் எல்லா படங்களின் ரிசல்டையும் இதே பரபரப்பு ப்ளஸ் முக்கியத்துவத்தோடு சொல்லலாமே!


காதலில் விழுந்தேன் படத்தின் முதல் நாள் காட்சியில், கிட்டத்தட்ட பாதிப் படத்திலேயே கால்வாசி ரசிகர்கள் திட்டியபடி எழுந்து சென்ற காட்சியைக் கண்ணால் பார்த்தேன். வெளியில் போய் படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநரை இங்கே எழுத முடியாத அளவு வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டுப் போனார்கள் ரசிகர்கள். ஆனால் வெகுஜன ஊடகமான சன் அந்தப் படம் வெற்றி என்று காட்ட அப்படி மெனக்கெட்டது.


அதன் பிறகு ரிலீஸ் பண்ண எல்லா படங்களுக்கும் இதே உத்திதான். தீ என்ற ஒரு குப்பைப் படத்தைக் கூட மெகா ஹிட் படம் என்றே வர்ணித்தார்கள். அது என்ன கருமமோ தெரியவில்லை… இவர்கள் வாங்குவது எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி, சிக்கான(Sick) படங்கள்தான் (அயனை மட்டும் இதில் சேர்க்க முடியாது!).


இதற்கு சிகரம் வைத்தது போல அமைந்திருக்கிறது இப்போது விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள வேட்டைக்காரன் படம் குறித்து சன் செய்யும் பொய்ப் பிரச்சாரங்கள்.


இந்தப் படம் குறித்து மக்கள் ஒருமனதாகச் சொன்ன, சொல்லி வரும் தீர்ப்பையே அழித்து எழுத நினைக்கிறது சன்.


சாதாரணமாக பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களைக் கூட விட்டுவிடலாம்… அவர்களின் தராசு தடுமாறுவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் காசு கொடுத்து மெனக்கெட்டு பார்த்துவிட்டு பதிவு செய்துள்ள நூற்றுக்கணக்கான பதிவர்களின் விமர்சனங்கள் ஒட்டுமொத்தமாக சொல்லும் தீர்ப்பைக் கூட பொய் என்கிறதா சன்?


எனக்குத் தெரிந்து படம் வெளியாகி 1 மணி நேரத்துக்குள் சூப்பர் டூப்பர் ஹிட் என்று புளுகப்பட்ட ஒரே படம் இந்த வேட்டைக்காரனாகத்தான் இருக்கும். இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகள் எம்ஜிஆர், ரஜினி, அமிதாப் படங்களுக்குக் கூட இப்படி ஒரு Verdict, அதுவும் அத்தனை மின்னல் வேகத்தில் தரப்பட்டதில்லை.


அட, ஒரு சினிமாவை பார்த்து முடிக்கவே 2.30 மணி நேரமாகுமே… இவர்களோ, வேட்டைக்காரன் படம் காலை 11.30 மணிக்கு வெளியானதென்றால், இவர்கள் அடுத்த ஒரு மணிநேரத்தில் தங்கள் செய்திகளில் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. வெற்றி வெற்றி என்று.


அன்று மாலையே விஜய் ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் வெற்றி’ என்று பேட்டியெல்லாம் தருகிறார். தங்கள் பொய்களை தாங்களே தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டதன் விளைவு இது.


விஜய் வெற்றி பெறுவதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதுவும் தன்னை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் என்று கூறிக் கொள்ளும், அவர் படங்களையே திரும்பத் திரும்ப காப்பியடிக்கும் விஜய் தாராளமாய் ஜெயிக்கட்டும். ஆனால் அதில் குறைந்தபட்ச ஒரு நேர்மை, யோக்கியத் தன்மை வேண்டாமா?


சொல்வது பொய் என்று தெரிந்தே அந்தப் பொய்யை மெய்யாக்கிக் காட்ட முயலும் சன் டிவியின் இந்தப் போக்கு, சமூகத்தின் நோயாக மாறி விடக்கூடாதே என்பதற்காகவே இந்த கட்டுரை.


குறிப்பு:

சன் பிக்சர்ஸ் தயாரிப்புதான் எந்திரன் படமும். இந்த அலசல் அதற்கும் பொருந்துமா என்ற ரீதியில் பின்னூட்டங்கள் வரக்கூடும். அவர்களுக்காக இந்த பதில்…


நிச்சயம் எந்திரன் படத்துக்கு இப்படிப்பட்ட நிலை வராது. ரஜினியின் எந்தப் படமும் பொய்ப் பிரச்சாரத்தில் ஓட்டப்பட்டவை அல்ல. வெற்றியோ தோல்வியோ… அவரது படங்களின் ரிசல்டை யாரும் மறைக்கவோ திசை திருப்பவோ முடியாது!
நன்றி
தமிழ் சாரல்

0 comments: