ஆமிர் கான் நடித்துள்ள 3 இடியட்ஸ் படம் திரையிட்ட இடமெல்லாம் வசூலைக் குவித்து வருகிறது. வெளியான மூன்றே தினங்களில் ரூ 100 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம். இது ஆமிர்கானின் முந்தைய படமான கஜினியை விட 30 சதவிகிதம் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் 2000 திரையரங்குகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 3 இடியட்ஸ்.
முன்னாபாய் தந்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், விதுவினோத் சோப்ரா தயாரிப்பில் உருவான படம் இது. ஒரு இந்திப் படம் இந்த அளவு அதிக பிரிண்டுகளுடன் உலகம் முழுக்க ரிலீசானது இதுவே முதல் முறை. ரிலீசுக்கு முந்தைய தினம் நடந்த பிரிமியர் ஷோவில் மட்டும் இந்தப் படம் ரூ 9 கோடி வசூலைப் பெற்றது. ரிலீஸ் ஆன முதல் மூன்று தினங்களில் மட்டும் இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்துள்ளது.
குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. பொதுவாக ஆமிர் கானின் படங்களுக்கு பிரிட்டனில் பெரிய மார்க்கெட் கிடையாது. கஜினி கூட அங்கே சராசரிப் படம்தான். ஆனால் இந்த முறை 3 இடியட்ஸ் அங்கும் ஹிட் படமாகியுள்ளது (ஆனால் இன்று வரை பிரிட்டனில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் இரண்டுதான்.
ஒன்று ரஜினி நடித்த சிவாஜி - தி பாஸ், அடுத்தது ஷாரூக்கானின் கபி அல்வித நா கெஹ்னா). மும்பை சினிமாக்ஸ் மல்டிப்ளெக்ஸில் இந்தப் படத்துக்கு 92 முதல் 95 சதவிகித ரசிகர்கள் குவிந்தனர், ஞாயிற்றுக் கிழமை. அதே நேரம் அவதார் படம் இங்கு 90 சதவிகிதத்துக்கும் மேலான ரசிகர்களுடன் சக்கைப் போடு போடுகிறது. வெர்சோவா ப்ராபர்ட்டியில் உள்ள சினிமாக்ஸ் மல்டிபிளெக்ஸில் 3 இடியட்ஸ் படம் ஒரு நாளைக்கு 25 காட்சிகள் ஓடுகிறது.
வார நாட்களிலேயே இதில் சராசரியாக 60 சதவிகிதம் அளவு ரசிகர்கள் வருகிறார்களாம். ஆனால் இங்கும் அவதாருக்குதான் முதலிடம். 95 சதவிகித ரசிகர் கூட்டம் குவிகிறதாம் அவதாருக்கு.
0 comments:
Post a Comment